×

4வது மகளிர் ஹாக்கி போட்டி: இந்தியாவை வீழ்த்திய ஆஸி

பெர்த்: இந்திய மகளிருக்கு எதிரான 4வது ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலியா மகளிர் அணி, 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணி, 4 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. ஏற்கனவே முடிந்த 3 போட்டிகளில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில், இந்தியா- ஆஸி இடையிலான 4வது ஹாக்கி போட்டி பெர்த் நகரில் நடந்தது.

போட்டி துவங்கிய 2வது நிமிடத்தில் இந்தியாவின் நவ்நீத் கவுர் அட்டகாசமாக பந்தை கடத்திச் சென்று பீல்ட் கோல் போட்டு கணக்கை துவக்கி வைத்தார். 2வது கால் போட்டியில் இந்திய அணியின் தீபிகா ஸோரெங், 23வது நிமிடத்தில் கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். ஆனால், போட்டியின் 3வது கால் பகுதியில் ஆஸி வீராங்கனைகள் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் போடுவதில் தீவிரம் காட்டினர்.

42வது நிமிடத்தில் அபி வில்சன், 44வது நிமிடத்தில் ஒலிவியா டவ்ன்ஸ் அடுத்தடுத்து 2 கோல்கள் போட்டு போட்டியை சமனிலைக்கு கொண்டு வந்தனர். 4வது கால் போட்டியில் ஆஸி அணியின் கர்ட்னி ஸ்ஹானல், 58வது நிமிடத்தில் சாதுரியமாக பந்தை கடத்திச் சென்று மேலும் ஒரு கோல் போட்டார்.

அதன் பின் போட்டி முடிவுக்கு வந்ததை அடுத்து, 3-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா மகளிர் அபார வெற்றி பெற்றனர். இதையடுத்து, 2-2 என்ற புள்ளிக் கணக்கில் இத் தொடர் சமன் அடைந்தது. வரும் ஆகஸ்ட் மாதம், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து நாடுகளில் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் ஆஸியுடனான தொடரை சமன் செய்ததன் மூலம் இந்திய அணிக்கு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது.

Tags : 4th Women's Hockey Match ,Aussies ,India ,Perth ,women's team ,Indian women's team ,women's hockey team ,Australia ,
× RELATED ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி டபுள்...