நாசரேத், மே 28: நாசரேத்தில் கூட்டுறவு நூற்பாலை செயல்பட்ட இடத்தில் புதிய தொழிற்சாலை துவங்குவதற்கு புதிய தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. நாசரேத் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பயன்பெறும் வகையில் திருச்செந்தூர் கூட்டுறவு நூற்பாலை, நாசரேத்தில் கடந்த 1962ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இங்கு பருத்தி, பஞ்சு நூல்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இந்த நூற்பாலை மூலம் நேரடியாக ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக 5 ஆயிரம் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு பெற்றனர். மேலும் திருச்செந்தூர், நாசரேத், ஆழ்வார்திருநகரி, குரும்பூர், சாத்தான்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களின் வாழ்வாதாரமும் உயர்ந்தது. மற்ற வணிகமும் சிறப்புற நடந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 2003 ஜூன் மாதம் இந்த ஆலை எவ்வித முன்னறிப்பின்றி திடீரென மூடப்பட் டது. இதைத் தொடர்ந்து நாசரேத் நகரம், கடந்த 23 ஆண்டுகளாக தொழில், வேலைவாய்ப்பில் பின் தங்கி இருந்து வருகிறது. நாசரேத்தில் மூடிக்கிடக்கும் திருச்செந்தூர் கூட்டுறவு நூற்பாலையை அப்போதிருந்த அரசு மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கும் என தொழிலாளர்கள் பெரிதும் நம்பியிருந்தனர். ஆனால் மீண்டும் திறக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளர்கள், வியாபாரிகள் தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழியிடம், நாசரேத் கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்ற அவர், நாசரேத்தில் மூடிக்கிடக்கும் திருச்செந்தூர் கூட்டுறவு நூற்பாலை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இல்லாதபட்சத்தில் இதே இடத்தில் அதை சார்ந்த தொழிற்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காமராஜர் ஆதித்தனார் கழக செயலாளரும், நாசரேத் பேரூராட்சி 3வது வார்டு கவுன்சிலருமான ஐஜினஸ் குமார், நாசரேத் பேரூராட்சி 10வது வார்டு கவுன்சிலர் பெனிட்ரோ தினகரன் ஆகியோர் கூறுகையில், மில் மூடப்பட்டதால் தொழிலாளர்கள், வியாபாரிகள் வேறு வேலை இல்லாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகி விட்டனர். சிலர் வேலை இல்லாமல் குடும்பத்தையே நடத்த முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
நாசரேத் கல்வி நகரமாக விளங்குகிறது. இங்கு தொழிற்படிப்பு படித்தவர்கள் உரிய தொழில் கிடைக்காமல் தூத்துக்குடி, கோவை, சென்னை, திருப்பூர், நெல்லை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இங்கே கூட்டுறவு அல்லது அரசு நிறுவனங்கள் செயல்பட்டால் படித்த இளைஞர்கள் வாழ்வாதாரம் பெறுவார்கள். மில் மூடப்பட்டதால் நாசரேத்தில் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டதோடு பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் ஏராளமாக இருந்தாலும் ஒவ்வொரு கல்லூரி நிறுவனங்களிலும் மாணவர்கள் சேர்க்கை குறைவாகவே காணப்படுகிறது. இப்பகுதியில் உள்ள படித்த இளைஞர்கள் வாழ்வாதாரம் பெற அதை சார்ந்த தொழில்நுட்ப பூங்காவை புதிய அரசு சார்பில் நிறுவ வேண்டும்.
அன்றைய, இன்றைய தமிழக அரசுகள், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு நாசரேத்தில் புதிய தொழிற்சாலை தொடங்க முன் வராதது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தவெக அரசாவது, புதிய தொழிற்சாலைகள் துவங்க நடவடிக்கை எடுக்குமென பொதுமக்கள், வியாபாரிகள் நம்புகின்றனர். மேலும் நாசரேத் வங்கிகளில் வியாபாரிகளுக்கு தொழில் கடன் வழங்கவும் வங்கி அதிகாரிகள் முன் வருவதில்லை. இந்த குறைபாட்டையும் சரி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். எனவே தமிழக அரசு நடவடிக்கை எடுத்து நாசரேத்தில் கூட்டுறவு நூற்பாலை செயல்பட்ட இடத்திலேயே புதிய தொழிற்சாலை அமைத்து அனைவருக்கும் வேலை வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்கள், வியாபாரிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
