சென்னை: எஸ்.பி.வேலுமணி தரப்பை சேர்ந்த மூத்த எம்எல்ஏக்கள் 4 பேர் நேற்று எடப்பாடியை சந்தித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். தவெகவுக்கு போக முயற்சித்ததுஎஸ்.பி.வேலுமணி அணி. ஆனால் அவர்களின் கட்சி பதவிகளை நீக்கி, சபாநாயகரிடம் புகார் அளித்தார் எடப்பாடி பழனிசாமி. மேலும் தவெக அமைச்சரவையிலும் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி, எடப்பாடியுடன் மோதல் போக்கு என்பது இல்லை என்று திடீரென பல்டி அடித்தார்.இதனால் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் எடப்பாடியுடன் மீண்டும் சேர உள்ளார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று முன்தினம் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவு எம்எல்ஏக்களான மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
இது எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் எஸ்.பி.வேலுமணி சி.வி.சண்முகத்தின் ஆதரவாளரான ஆற்காடு எம்.எல்.ஏ. சுகுமார், அந்தியூர் ஹரிபாஸ்கர், பண்ருட்டி கே.மோகன், சங்கரன்கோவில் திலீபன் ஜெயசங்கர், காங்கேயம் என்.எஸ்.என். நடராஜன் ஆகிய 5 எம்எல்ஏக்கள் எடப்பாடியை சந்தித்து பேசி ஆதரவு தெரிவித்தனர். இந்த பரபரப்புக்கு மத்தியில் நேற்று ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்தார்.
அதாவது எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்எல்ஏவான அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையாவும் ராஜினாமா செய்தார். தொடர்ந்து அவர் தவெகவில் இணைந்தார். மேலும் 6 எம்எல்ஏக்களும் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படி ஆதரவு எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தவெகவிற்கு தாவி வருவது எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று மாலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடியை சந்தித்து எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி ஆதரவு தெரிவித்தார். அவரை தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி தரப்பு ஆதரவு எம்எல்ஏக்களான நத்தம் விஸ்வநாதன், ஹரி, அருண்மொழி தேவன், ரவி மனோகரன் மற்றும் தங்கமணி ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது இரு அணிகளும் இணைவது தொடர்பாக சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது பதவி பறிக்கப்பட்ட அனைவருக்கும் மீண்டும் அதே பதவி வழங்கப்படும். வழிகாட்டு குழு என்பது அமைக்கப்படாது. தோல்வி குறித்து ஆராய குழு அமைக்கப்படும். பொதுக்குழுவை கூட்ட வலியுறுத்தக்கூடாது. தேவை ஏற்படும் போது மட்டுமே பொதுக்குழு கூட்டப்படும் என்று எடப்பாடி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை எஸ்.பி.வேலுமணி தரப்பு ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அவர்கள் எடப்பாடியுடன் இணைவார்கள் என்று கூறப்படுகிறது.
