×

மீஞ்சூர் அருகே அடிப்படை வசதி வலியுறுத்தி டேங்கர் லாரி டிரைவர்கள் இன்று காலை வேலை நிறுத்தம்

பொன்னேரி: மீஞ்சூர் அருகே லோடு ஏற்றவரும்போது பல மணி நேரம் காக்கவைப்பதாகவும், அடிப்படை வசதி கேட்டும் டேங்கர் லாரி டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவுகிறது. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் இந்துஸ்தான் பெட்ரோலியம் முனையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வடதமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கும், பாண்டிச்சேரிக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தி டேங்கர் லாரி ஓட்டுநர்கள் இன்று காலை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அவர்கள், பெட்ரோலியம் முனையத்தில் லோடு ஏற்றுவதற்காக காலையில் வரும் டேங்கர் லாரிகளை மாலை வரை காக்க வைப்பதாகவும், ஓட்டுநர்கள் அலைகழிக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்தனர். மேலும் பல மணி நேரம் காக்க வைக்கப்படும் நிலையில் குடிநீர், கழிப்பறை, கேண்டின் உட்பட அடிப்படை வசதி ஏதுவும் இல்லை. கழிப்பறைகள் மோசமான நிலையில் உள்ளது. கோடை வெயிலில் ஒதுங்குவதற்குகூட ஓட்டுனர்களுக்கு இடமில்லை.

லோடு ஏற்ற வரும் டேங்கர் லாரிகளுக்கு உடனுக்குடன் பெட்ரோல், டீசல் ஏற்றி அனுப்பாமல் காலதாழ்த்துவதால் ஓட்டுநர்கள் மிகுந்த சிர மப்பட்டு வருகின்றனர். எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் அலட்சிய போக்கை கடைபிடிப்பதாக கூறினர்.
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டேங்கர் லாரி ஓட்டுனர்களிடம் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். டேங்கர் லாரி ஓட்டுநர்கள் போராட்டம் நீடிக்கும் பட்சத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட வடமாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவுகிறது.

Tags : Minjur ,Ponneri ,
× RELATED சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்