×

அரசு மருத்துவமனையில் குளம் போல் தேங்கிய நீர்

 

ராசிபுரம், மே 26: ராசிபுரத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்குள் மழை நீர் புகுந்து குளம் போல் தேங்கியது. இதனால், நோயாளிகள் மாற்று அறைக்கு இடம் மாற்றப்பட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து, பல மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ராசிபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், உள்நோயாளி பிரிவுகள் மற்றும் பிரசவ வார்டு செல்லும் வழியில் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கியது.

உள்நோயாளிகள் பிரிவிற்குள் மழை நீர் தேங்கியதால், அங்கு சிகிச்சையில் இருந்த நோயாளிகள் மாற்று அறைக்கு முழங்கால் அளவில் உள்ள தண்ணீரில் நடந்து சென்றனர். நடக்க முடியாத நோயாளிகளை சக்கர நாற்காலியில் பணியாளர்கள் அழைத்துச் சென்றனர். கனமழை காலங்களில் மருத்துவமனைக்குள் மழை நீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளதால், மழை நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே போல், புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

பட்டணம் சாலையில் சுமார் 100 வருடங்கள் பழமையான விநாயகர் கோயில் ஆலமரம் முறிந்து விழுந்தது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனிடையே, நேற்று முன்தினம் ராசிபுரத்தில், டூவீலரில் சென்ற சித்ராதேவி (49), அவரது மகள் தர்ஷினி (22), மற்றொரு பகுதியை சேர்ந்த தயாள்பிரவீன் (20), பர்வேஸ் (14) உள்பட 4 பேர் மீது சுவர் இடிந்து விழுந்தது. இதில் சித்ராதேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து நிகழ்ந்த பகுதியில், ராசிபுரம் தாசில்தார் சசிகுமார் நேற்று ஆய்வு செய்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், `மழையால் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், பெண் ஒருவர் இறந்து விட்டார். அவரது குடும்பத்தினருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக, இயற்கை பேரிடர் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,’ என்றார்.

 

Tags : Rasipuram ,Namakkal district ,Rasipuram… ,
× RELATED 2 ஜவுளிக் கடைகளில் ரூ.8.60 லட்சம் கொள்ளை