வேலூர் செங்கல் சூளைகளில் மாமூல் கேட்டு மிரட்டல்: தவெகவினரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

 

வேலூர்: வேலூர் கணியம்பாடி செங்கல் சூளைகளில் மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்த தவெகவினரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். வேலூர் அடுத்த கணியம்பாடி, கணியம்பாடி புதூர், நெல்வாய், வல்லம் உள்ளிட்ட இடங்களில் 25க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் கடந்த 22ம் தேதி கணியம்பாடி ஒன்றிய தவெக செயலாளர் விஜயகுமார், நிர்வாகிகள் லோகேஷ், ஈஸ்வரன் உட்பட பலர் கார், பைக்குகளில் கணியம்பாடி புதூரில் இயங்கி வரும் செங்கல்சூளைகளில் புகுந்து மாதம் ரூ.1 லட்சம் கொடுக்காவிட்டால் சூளைகளை இழுத்து மூடுவோம் என மாமூல் கேட்டு மிரட்டியதோடு ஆபாசமாக பேசி உள்ளனர். இதில் தகராறு ஏற்பட்டதால் வேலூர் தாலுகா போலீசார் இருதரப்பையும் சமாதானப்படுத்தினர். இதற்கிடையில் தவெகவினர் மாமூல் கேட்டு மிரட்டிய வீடியோ வைரலானது.

மேலும் செங்கல்சூளை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தாலுகா போலீசாரிடம் புகார் மனு அளித்தனர். ஆனால் புகார் கொடுத்து 2 நாட்கள் ஆகியும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் செங்கல் சூளை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று காலை கணியம்பாடி பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த தாசில்தார் பழனி மற்றும் தாலுகா போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ‘மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டத்தை கைவிடமாட்டோம்’ என தெரிவித்தனர். அதற்கு போலீசார், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு, சாலையோரமாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரையும் ஆர்ஐ அலுவலகத்திற்கு வரவழைத்து, ஆர்டிஓ செந்தில்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆர்டிஓ செந்தில்குமார் கூறுகையில், பணம் கேட்டு மிரட்டியதற்கான ஆடியோ ஆதாரம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதை சமர்ப்பிக்க அறிவுறுத்தி உள்ளோம். ஆதாரம் உண்மையாக இருந்தால் வழக்குப்பதியப்படும் என்றார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

* நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்க பொதுமக்கள் கோரிக்கை

செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதி பெண்கள் கூறுகையில், ‘கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செங்கல் சூளை தொழிலையே வாழ்வாதாரமாக நம்பி 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறோம். திடீரென எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் மாமூல் கேட்டு மிரட்டுவது கண்டிக்கத்தக்கது. மாமூல் கேட்டு மிரட்டிய தவெக நிர்வாகி விஜயகுமார் உள்ளிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவரை அக்கட்சி பதிவிலிருந்து நீக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: