வேலூர், மே 25: வேலூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்ட போது, குறைபாடுகள் கண்டறியப்பட்ட 77 தனியார் பள்ளி வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தில் ஆண்டுதோறும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்நிலையில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக கோடை விடுமுறை நாட்களில் மாவட்டம் தோறும் தனியார் பள்ளி வாகனங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதில் தகுதியுள்ள வாகனங்கள் இயக்க அனுமதி வழங்கப்படுகிறது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் வரும் 2026-27ம் கல்வி ஆண்டையொட்டி தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு கடந்த 19, 20ம் தேதிகளில் நடந்தது. வேலூர், குடியாத்தம் பகுதிகளில் நடந்த இந்த ஆய்வில் மொத்தம் 141 பள்ளிகளை சேர்ந்த 990 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. வேலூரில் நடந்த ஆய்வில் 42 பள்ளி வாகனங்கள், குடியாத்தம் பகுதியில் நடந்த ஆய்வில் 35 வாகனங்கள் என மொத்தம் 77 தனியார் பள்ளி வாகனங்கள் குறைபாடுகள் கண்டறியப்பட்டது.
தொடர்ந்து அந்த வாகனங்கள் சீரமைக்கும்படி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பள்ளி வாகனங்களில் உள்ள குறைபாடுகள் பள்ளி திறப்பதற்கு முன்னதாக சரி செய்யப்பட்டு, வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வுக்கு உட்படுத்தி பின்னர் அதனை இயக்க வேண்டும் என பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
