கோவில்பட்டி,மே 25: கோவில்பட்டி ஸ்டேட் பாங்க் காலனியில் சுமார் 300க்கும் வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் நகராட்சி தூய்மை பணியாளர் சரிவர குப்பைகளை வாங்குவதில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை சாலையோரங்களில் கொட்டி விட்டுச் செல்கின்றனர். இதனால் குப்பைகள் மலைபோல் குவிந்து துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் கால்நடைகளும் அவற்றை பிளாஸ்டிக் கழிவுகளோடு உண்பதால் அவை இறக்கும் அபாயமும் ஏற்படுகின்றன. சில சமயங்களில் அந்த குப்பைகளுக்கு தீ வைத்து சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகத்தினர் குப்பைகளை அள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
