சென்னை: தலைமைச் செயலகத்தில், உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்களை விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சந்தித்து கலந்துரையாடினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்வதை நோக்கமாக கொண்டு இதற்கென அரசு உயர் அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் எனது கைபேசி எண்ணை உள்ளடக்கிய வாட்ஸ் ஆப் குழு உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விளையாட்டு அறிவியல் அடிப்படையிலான பயிற்சிகள், ஊட்டச்சத்து மிக்க உணவு, உயர்தர பயிற்சி முகாம்கள், உளவியல் நிபுணர்களின் ஆலோசனைகள், சிறந்த பயிற்சியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தேவையான உதவியையும் வழங்க விளையாட்டுத் துறை தயாராக உள்ளது. குறிப்பாக வரும் ஒலிம்பிக் போட்டியில் ஸ்குவாஷ் விளையாட்டு முதன்முறையாக சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஸ்குவாஷ் உலகக் கோப்பைப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியில் 4 வீரர்களில் 3 பேர் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது பெருமைக்குரிய சாதனையாகும். இந்த உலகக் கோப்பை வெற்றியை தொடர்ந்து நம் அடுத்த இலக்காக ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கங்கள் வெல்வதேயாகும். அந்த வகையில் 2028ம் ஆண்டிற்கான ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்ல விளையாட்டு மேம்பாட்டுத் துறை தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளும்.
