சென்னை: சிபிஎஸ்இ இணையதளத்தில் குளறுபடிகள் தொடரும் நிலையில் இணைய தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்ய சென்னை ஐஐடி வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தவறாகப் பெறப்பட்ட கட்டணங்கள் திரும்ப வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொது தேர்வில் ஓஎஸ்எம் எனப்படும் ஆன் ஸ்கிரீன் மார்க்கிங் முறையில் திருத்தம் செய்ததன் காரணமாக, எதிர்பார்த்ததை விடக் குறைவாக மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தது.
அதனால், மறுமதிப்பீடு செய்வதற்கு ஏதுவாக விடைத்தாள் நகல் பெறும் கட்டணத்தை ஒன்றிய கல்வி அமைச்சகம் குறைத்தது. விடைத்தாளைச் சரிபார்க்கவும், மறுமதிப்பீடு செய்யவும் இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மாணவர்கள் ஒரே நேரத்தில் சிபிஎஸ்இ இணையதளத்தில் விண்ணப்பிக்க முயற்சித்ததால், கடந்த சில நாட்களாக இணையதளத்தில் குளறுபடி ஏற்பட்டது. அதேபோல், பணம் செலுத்துவதிலும் ஏராளமான பிரச்சனைகள் இருந்துள்ளது.
இந்தத் தொழில்நுட்பக் குளறுபடிகளால் மாணவர்கள் விடைத்தாள் நகல் பெறும் வாய்ப்பை இழந்து விடக்கூடாது என்பதற்காகவே சனிக்கிழமையே விடைத்தாள் பெறுவதற்கான கடைசிநாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வரை அது நீட்டிக்கப்பட்டது. இந்தச் சூழலில், நேற்று சிபிஎஸ்இ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மே 21, 22 அன்று, மாணவர்கள் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்களுக்கு விண்ணப்பித்தபோது, சில தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாக சில சமயங்களில் தவறான கட்டணப் பிடித்தம் செய்யப்பட்டன.
கூடுதல் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டவர்களின் கூடுதல் தொகையானது, பணம் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட அதே கட்டண முறைக்கே திருப்பிச் செலுத்தப்படும். இதேபோல், குறைவான கட்டணம் பிடித்தம் செய்யப்பட்ட நிகழ்வுகளில், தேவைப்பட்டால், மீதமுள்ள தொகையைச் செலுத்துவது குறித்து விண்ணப்பதாரர்களுக்குத் தனியாகத் தெரிவிக்கப்படும். இத்தகைய அனைத்து நிகழ்வுகளிலும், விண்ணப்பதாரர்கள் புதிய கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தேவையின்றி, மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்கள் வழங்கப்படும். எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுக்குப் பிந்தைய மறுமதிப்பீடு தொடர்பான செயல்பாடுகளில் இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்து, பிழையற்ற மறுமதிப்பீட்டு செயல்முறையை உறுதி செய்வதில் உதவுவதற்காக, மெட்ராஸ் ஐஐடி மற்றும் கான்பூர் ஐஐடி பேராசிரியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழுவை நியமிக்க ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, நீட் வினாத் தாள்கள் வெளியாகியது இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது சிபிஎஸ்சியின் மோசமான செயல்பாடு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
