ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிக்கான முதல் நிலை தேர்வு: இந்தியா முழுவதும் சுமார் 5.49 லட்சம் பேர் எழுதினர்

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு நேற்று நடந்தது. இந்தியா முழுவதும் நடைபெற்ற தேர்வில் 5.49 லட்சம் பேர் எழுதினர். 2026ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 933 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 4ம் தேதி யுபிஎஸ்சி அறிவித்தது. பிப்ரவரி 24ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

நாடு முழுவதும் 8 லட்சத்து 19 ஆயிரத்து 372 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். முதல் நிலை தேர்வு நாடு முழுவதும் 83 நகரங்களில் நேற்று நடந்தது. 5.49 லட்சம் பேர் எழுதியதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து மட்டும் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்காக சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் வேலூர் ஆகிய 5 நகரங்களில் தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

சென்னையை பொறுத்தவரையில், 82 மையங்களில் தேர்வு நடைபெற்றது. சென்னையில் மட்டும் 23 ஆயிரத்து 120 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களில் 16 ஆயிரத்து 778 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். நேற்று காலை மற்றும் பிற்பகல் என இருவேளைகளிலும் முதல்நிலை தேர்வு நடந்தது. காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை பொது பாடத் தேர்வும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறனறிவுத் தேர்வும் நடந்தது. வினாக்கள் அனைத்தும் அப்ஜெக்டிவ் வடிவில் இருந்தது.

தேர்வு எழுத காலை 7 மணி முதலே தேர்வு கூடங்களுக்கு மாணவ-மாணவிகள் வரத் தொடங்கினர். அவர்கள் கடும் சோதனைக்கு பிறகே தேர்வு கூடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து சங்கர் ஐ.ஏ.எஸ்.அகடாமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் 2 வாரங்களில் வெளியிடப்பட வாய்ப்புள்ளது.

இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்டமாக மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். மெயின் தேர்வு மொத்தம் 5 நாட்கள் நடைபெறும். மெயின் தேர்வு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மெயின் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். பின்னர் நேர்முக ேதர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.

Related Stories: