×

அதிமுக எம்எல்ஏக்கள் விவகாரத்தில் முடிவு எடுக்கும்போது நான் எப்படி நியாயமாக நடந்து கொண்டேன் என்பதை நாடறியும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேட்டி

சென்னை: தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக கொறடா உத்தரவை மீறி அதிமுகவின் எஸ்.பி. வேலுமணி அணியினர் ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அதிமுகவில் எடப்பாடி அணி, வேலுமணி அணி என்று இரு பிரிவாக செயல்பட்டது. தவெகவுக்கு எதிராக வாக்களித்ததால் அதிமுக எடப்பாடி பழனிசாமி உள்பட 22 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென சட்டப்பேரவை தலைவரிடம் சி.வி.சண்முகம் தரப்பு மனு அளித்துள்ளது.

அதேபோல எடப்பாடி தரப்பும், தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த 25 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் மனு அளித்தது. இதனால் சபாநாயகர் என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் நேற்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேட்டி அளித்தார். அவரிடம், “சட்டமன்றத்தில் தவெகவுக்கு ஆதரவு அளித்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு ஆதரவாக நீங்கள் செயல்படுகிறீர்கள் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

இதை எப்படி அணுக போகிறீர்கள்” என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு சபாநாயகர், ‘ நான் நடுநிலையில் இருந்து பணியாற்றுகிறேனா என்பதை நான் தீர்ப்பு வழங்கும் போது தமிழ்நாடே தெரிந்து கொள்ளும். இருவேறு குழுக்களாக பிரிந்து இருக்கும் அதிமுகவினர் மனு கொடுத்து இருக்கிறார்கள். அது என்னுடைய ஆய்வில் இருக்கிறது. உரிய நேரத்தில் உரிய முடிவெடுத்து சட்டசபையில் அறிவிக்கும் போது, நான் எப்படி நியாயமாக நடந்து கொண்டேன் என்பதை நாடு தெரிந்து கொள்ளும்’ என்று பதிலளித்தார்.

Tags : AIADMK ,Speaker ,J.C.T. Prabhakar ,Chennai ,S.P. ,Velumani ,Thaveka government ,Edappadi ,Thaveka ,
× RELATED இன்ஸ்பெக்டர் தாக்கியதால் விஷம்...