சென்னை: அதிமுகவில் இருந்து முன்னாள் எம்பி வேணுகோபால் விலகியுள்ளார். அதிமுக முன்னாள் எம்.பி வேணுகோபால் நேற்று வெளியிட்ட அறிக்கை: எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் ஒன்றரை கோடி தொண்டர்களால் கட்டமைக்கப்பட்ட அதிமுக தற்போது சந்தித்து வரும் தொடர் பின்னடைவுகளுக்கு பின்னால் பல்வேறு அரசியல் மற்றும் சமூக காரணிகள் உள்ளன. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் காலத்தில் அதிமுக அசைக்க முடியாத பலமாகப் பட்டியலின ஆதரவு இருந்தது.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஒரு வலுவான அனைவருக்குமான தோற்றம் குறைய தொடங்கியது. அந்த ஆதரவு தளம் படிப்படியாகச் சரிந்தது. தற்போதைய அரசியல் சூழலில், பட்டியலின மக்கள் தங்களை அதிமுகவில் இருந்து முழுமையாக துண்டித்து கொண்டதோ அல்லது புறக்கனிப்பதோ அதிமுகவின் தேர்தல் தோல்விகளுக்கு ஒரு முதன்மையான காரணமாகப் பார்க்கப்படுகிறது. அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்துச் சென்ற அதிமுக “சமூக கூட்டமைப்பு தற்போது ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி எழும் தோற்றம், மற்ற சமூகத்தவரிடையே ஒரு இடைவெளியை உருவாக்கி உள்ளது.
மீண்டும் அதிமுக பழைய பலத்தை பெறவேண்டும் என்றால் அனைத்து கழகத்தினரையும் உள்ளடக்கி ஒரு பொதுவான அரசியல் அணுகுமுறையையும் நம்பிக்கையும் மீண்டும் கட்டி எழுப்பவேண்டியது காலத்தில் கட்டாயமாகும். தமிழ் மக்கள் நலனையும், அதிமுக தொண்டர்கள் நலனையும் கருத்தில் கொள்ளாமல் பல்வேறு முரண்பட்ட கருத்துகளோடு செயல்பட்டு வரும் அதிமுகவை வலுப்படுத்த அனைவரும் விட்டுக்கொடுத்து ஓரணியில் திரண்டு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக தொண்டர்கள் அனைவரின் சார்பாக முன்வைத்து மீண்டும் அதிமுக எழுச்சி பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டு மிக்க கனத்த இதயத்தோடும் ஆழ்ந்த மன வருத்தத்தோடும் இன்று முதல் என்னை அதிமுகவில் இருந்து விடுவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் எம்.பி டாக்டர் வேணுகோபால் அதிமுக சார்பில் தொடர்ந்து இரண்டு முறை (2009 மற்றும் 2014) திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2017ல் அதிமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
