×

கோடை விடுமுறை முடிந்து அடுத்த வாரம் பள்ளிகள் திறப்பு; நோட்டுப்புத்தகம், ஸ்கூல் பேக், ஷூ, லஞ்ச் பாக்ஸ் விற்பனை மும்முரம்: தமிழகம் முழுவதும் கடை வீதிகளில் அலைமோதிய கூட்டம்

சென்னை: கோடை விடுமுறை முடிந்து அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நோட்டுப் புத்தகம், ஸ்கூல் பேக், ஷூ, லஞ்ச் பாக்ஸ் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இதனால் தமிழகம் முழுவதும் கடை வீதிகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தேதி நிறைவடைந்தது. தொடர்ந்து ஏப்ரல் 17ம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதையடுத்து, மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

அங்கு அவர்கள் குடும்பத்துடன் கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். மேலும் சுற்றுலா தளங்களை சுற்றி பார்க்கவும் பலரும் புறப்பட்டு சென்றனர். இதனால், கோடை விடுமுறை நாட்களில் சுற்றிலா தளங்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. சுமார் 45 நாட்கள் விடுமுறைக்கு பிறகு வருகிற திங்கட்கிழமை, அதாவது ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளி திறப்புக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சியுள்ளது. இதனால் குழந்தைகள் பள்ளி செல்லத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்வதில் பெற்றோர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் மாணவ-மாணவியருக்குத் தேவையான நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், வாட்டர் பாட்டில், உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் ஸ்டேஷனரி கடைகளிலும், ஸ்கூல் பேக், ஷூ, லஞ்ச் பாக்ஸ் போன்றவற்றை வாங்கக் கடைகளில் கூட்டம் நேற்று கூட்டம் அலைமோதியது. அதாவது, நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குழந்தைகளும், பெற்றோர்களும் பள்ளி திறப்புக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடை வீதிகளில் குவிந்தனர்.

புதிதாகப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவியர் தங்களது பெற்றோருடன் வந்து தங்களுக்குத் தேவையான ஸ்டேஷனரி பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்கிச் சென்றனர். இதனால் நேற்று சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் விற்பனை களைக்கட்டியதை பார்க்க முடிந்தது. இதுகுறித்து குழந்தைகளின் பெற்றோர்கள் கூறுகையில், “குழந்தைகளுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் பள்ளி திறப்பதற்கு முன்னரே வாங்கினால் மிகவும் சுலபமாக இருக்கும்.

இன்று(நேற்று) ஞாயிற்றுக்கிழமை என்பதால் எங்களுக்கும் விடுமுறை நாட்களாக உள்ளது. அடுத்த வாரம் பள்ளி திறக்கப்படும் நிலையில் ஸ்டேஷனரி பொருட்கள் மற்றும் பள்ளிக்குத் தேவையான பொருட்கள் வாங்க வந்துள்ளோம்” என்று தெரிவித்தனர். அதே நேரத்தில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு பள்ளிகளுக்கு தேவையான பொருட்கள் விலை என்பது சற்று அதிகரித்து காணப்பட்டது. இருந்த போதிலும் பொருட்களை பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதே நேரத்தில் கோடை விடுமுறையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் வரும் நாட்களில் திரும்ப உள்ளனர்.

இதனால் பஸ், ரயில்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் ஜூன் 1 திறக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து 2026-2027ம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள், புத்தகப்பைகள் உள்ளிட்ட நலத்திட்ட பொருட்கள் அனைத்து மாவட்ட மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மாவட்ட மையங்களில் இருந்து பள்ளிகளுக்கு நேரடியாக நலத்திட்ட பொருட்களை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil Nadu… ,
× RELATED இன்ஸ்பெக்டர் தாக்கியதால் விஷம்...