சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் கொள்கைகளிலும் கருத்தியலிலும் தடம் மாறத் தயாராகிவிட்டார் என விமர்சித்து, விசிகவில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு அறிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கமாக இருந்த விசிகவுக்கு 6 தனித் தொகுதிகளும், 2 பொதுத் தொகுதிகளும் என மொத்தம் 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டார்.
அதில் சிட்டிங் எம்எல்ஏக்களாக இருந்த எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, செய்யூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த பனையூர் பாபுவுக்கு பதிலாக சிந்தனை செல்வன் அந்தத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆலோசனை எதுவுமின்றி செய்யூர் தொகுதியை சிந்தனைச் செல்வனுக்கு ஒதுக்கியதாகக் கூறி பனையூர் பாபு கடும் விரக்தியில் இருந்ததாகத் தெரிகிறது.
தேர்தல் முடிந்த பிறகு எல்லாம் சரியாகிவிடும் எனச் சொல்லப்பட்ட நிலையில், பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரித்தன. தேர்தல் முடிந்த பிறகு சிட்டிங் எம்எல்ஏக்களாக இருந்த எஸ்.எஸ்.பாலாஜிக்கு விசிக பொருளாளர் பொறுப்பும், ஆளூர் ஷாநவாஸுக்கு மாநில முதன்மைச் செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டன. இதிலும் பனையூர் பாபுவுக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. இது பாபு தரப்பில் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தேர்தல் முடிவுகள் வெளியானபோது, செய்யூர் தொகுதியில் போட்டியிட்ட சிந்தனை செல்வன் சுமார் 5,900 வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவிடம் தோல்வியைத் தழுவினார். 57,909 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்கு சென்றார். செய்யூர் தொகுதியை தேர்தலுக்காக தயார் செய்து வைத்திருந்தார் பனையூர் பாபு. ஆனால் மக்களுக்கு பெரிய அளவில் பரிச்சயம் இல்லாத முகம் விசிக சார்பில் போட்டியிட்டதே இந்தத் தோல்விக்கு முக்கிய காரணம்.
ஏற்கனவே எம்எல்ஏவாக இருந்த பனையூர் பாபு செய்யூர் தொகுதியில் போட்டியிட்டு இருந்தால் வெற்றி பெற்றிருப்பார் என விசிக வட்டாரங்கள் தெரிவித்தன. கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருந்த பனையூர் பாபு நேற்றுதிடீரென கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமீப காலங்களாகத் விசிக தலைமையின் (திருமாவளவன்) செயல்பாடுகளும், அரசியல் நிலைப்பாடுகளும் வேதனையையும் எனக்குப் பெரும் வியப்பையும் அளிக்கின்றன.
ஒவ்வொரு நாளும் ஒரு நிலைப்பாடு எனத் தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது, அரசியல் களத்திலும் தொண்டர்களிடையேயும் பெரும் குழப்பத்தை உருவாக்குகிறது. நேற்று வரை ஒரு நடிகரை ‘ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி பெற்றெடுத்த பிள்ளை’ என்று கடுமையாக விமர்சித்த அவர், இன்று அதே பிள்ளையைத் தத்தெடுப்பது போல் நிலைப்பாடு எடுப்பது, அவர் இதுகாலம் வரை சமரசமின்றி கட்டிக்காத்த கொள்கைகளிலும், கருத்தியலிலும் தடம்மாறத் தயாராகிவிட்டார் என்பதையே அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
விசில் அடிப்பவர்கள் எல்லாம் திரையரங்கத்திற்குத்தான் செல்ல வேண்டும், சட்டமன்றத்திற்கு வரக் கூடாது; அவர்கள் பெரியாரும் அம்பேத்கரும் பேசிய அரசியலையும், கொள்கைகளையும் வீழ்த்துவதற்கு வந்தவர்கள் என்று சூளுரைத்த அவர், இன்று அவர்களுடனே கைகோர்க்கவும், இயக்கத்தின் கொள்கையை மழுங்கடிக்கவும் முற்படுவது முரண்பாட்டின் உச்சமாகும். ஆட்சி அதிகாரங்கள் வரும், போகும்; அது நிலையற்றது. ஆனால், பெரியாரும் அம்பேத்கரும் நமக்கு வகுத்துத் தந்த கொள்கைகளே என்றென்றும் வாழும் நிலையான ஆயுதங்கள்.
அரசியல் தளத்தில், மக்கள் சித்தாந்தங்களை விடக் கவர்ச்சியின் பின்னால் ஈர்க்கப்படுவது ஆபத்தானது என்று அம்பேத்கர் கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனால் இன்று அந்த அபாயகரமான திசையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோமோ என அஞ்சுகிறேன். கொண்ட கொள்கையிலும், எடுக்கும் நிலைப்பாட்டிலும் உறுதியாக இல்லாமல், அடிக்கடி நிலைப்பாடுகளை மாற்றி, குழப்பத்திலும் அவநம்பிக்கையிலும் செயல்படும் ஒரு தலைமையின் கீழ் இனியும் என்னால் பயணிக்க இயலாது என எனது மனசாட்சி உணர்த்துகிறது.
எனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் முழுமையாக விலகுகிறேன் என்ற எனது முடிவைக் கனத்த இதயத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். நான் கட்சியிலிருந்து விலகினாலும், திருமாவளவனிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட கொள்கைகளிலும், கருத்தியலிலும் இம்மியளவும் பின்வாங்காமல் உறுதியாக நின்று பயணிப்பேன்.
அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகியோர் காட்டிய வழியில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கான எனது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும். நெருக்கடிகள் சூழ்ந்த போதும் கொள்கை நெறிப்படியே வாழ்தல் வீரம், நெருப்பலைக்குள் வீழ்ந்த போதும் அடிமை நெறி மீறி பாய்தல் தீரம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
