ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது, அமைச்சர் ராஜீவ் தனது துறையை மறந்து, வேறு துறையின் பெயரை மாற்றிக் குறிப்பிட்டு பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ராஜீவ். இவர் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு நேற்று முன்தினம் ராமநாதபுரம் வந்தார்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறுகையில், `‘என்னை சுற்றுலாத்துறை அமைச்சராக நியமித்ததற்கு முதல்வர் விஜய்க்கு நான் ரொம்ப கடமைப்பட்டிருக்கேன். பெரிய நம்பிக்கை வைத்து எனக்கு இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை பற்றி உங்களுக்கு தெரியும்’’ என கூறினார். அவர் தனது துறையின் பெயரை மறந்து சுற்றுலாத்துறை என அடுத்தடுத்து 2 முறை மாற்றி குறிப்பிட்டு பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
பின்னர், சுதாரித்துக்கொண்ட அமைச்சர் ‘ரீடேக்’ என்பது போல சைகையில் காட்டி , ‘முதலில் இருந்து ஆரம்பித்து சுற்றுச்சூழல் துறை’ என சரியாக கூறினார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘சுற்றுச்சூழல் துறையில் நிறைய மாற்றங்கள் கொண்டுவர உள்ளோம். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் சீல் வைக்கப்படும். சட்டத்தை மீறி செயல்படுவர்கள் திருந்த இன்று ஒருநாள் மட்டுமே வாய்ப்பு. இன்று முதல் சுற்றுச்சூழலுக்கு எதிராக செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
* அமைச்சர் வரவேற்பை பெண் மாசெ புறக்கணிப்பு
ராமநாதபுரம் மேற்கு மாவட்ட தவெக செயலாளராக மதன், கிழக்கு மாவட்ட செயலாளராக மலர்விழி ஜெயபாலா உள்ளனர். இவர்கள் ஏற்கனவே இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். அமைச்சர் ராஜீவை வரவேற்க மதன் தனது ஆதரவாளர்களுடன் வந்தார்.
ஆனால், மலர்விழி ஜெயபாலா பங்கேற்காமல் புறக்கணித்தார். விஜய் ரசிகர் மன்றம் துவங்கப்பட்ட காலத்தில் இருந்து பொறுப்பில் இருக்கும் தன்னை மதிக்காமல் ஆரம்பம் முதலே ராஜீவ் தனி ரூட்டில் செயல்பட்டு வருவதால், அவர் மீதான அதிருப்தியில் வரவேற்பு நிகழ்ச்சியை மலர்விழி ஜெயபாலா புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
