விஜய் முதல்வராக கூடாது என்று பாஜ வேலை செய்தது: எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி

சிவகாசி: விஜய் முதல்வராக வரக்கூடாது என நினைத்து பாஜ வேலை செய்தது என எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பாஜ ஆணைப்படி அதிமுக, திமுக கூட்டணி அமைப்பதாக தகவல் வந்ததை அடுத்து தான், தவெக உடன் கூட்டணி அமைத்தோம். விஜய் முதல்வராக கூடாது என பாஜ நினைத்தது. இதனால் டெல்லியில் உயர்நிலை கூட்டத்தை கூட்டி தவெக கூட்டணி என்ற முடிவை அறிவித்தோம்.

இந்த தேர்தலில் போதை பொருள், பெண்கள் பாதுகாப்பு முக்கிய பிரச்னையாக இருந்தது. மகளிர் பாதுகாப்பு தான் முக்கியம் என முதல்வர் கூறி உள்ளார். இன்னும் அதிகாரிகளை கூட முழுமையாக மாற்றவில்லை. அரசுக்கு உரிய அவகாசம் கொடுக்க வேண்டும். இந்தியா கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை. திமுக விலகி விட்டது, அதற்கு பதிலாக தவெக இணைந்து உள்ளது.

தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை நனவாகி உள்ளது. அமைச்சரவையில் இடம் பெற்றதன் மூலம் கூட்டணி மேலும் உறுதியாகி உள்ளது. இந்த கூட்டணி வரும் தேர்தல்களிலும் தொடரும். விரைவில் தவெக கூட்டணிக்கு பெயர் அறிவிக்கப்படும். பாஜ அரசின் நிர்வாக சீர்கேட்டால் 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை 3 முறை உயர்ந்துள்ளது. இது மேலும் உயரும். பாஜவை வீழ்த்த ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: