புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

பழநி: பழநியில் புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம், பழநி தாலுகா காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணிபுரிந்து வந்தவர் ராஜகோபால் (34). கடந்த சில நாட்களுக்கு முன்பு அடிதடி பிரச்னை தொடர்பாக, புகார் கொடுக்க பெண் ஒருவர் பழநி தாலுகா காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அப்பெண்ணின் செல்போன் எண்ணை பெற்றுக் கொண்ட எஸ்ஐ ராஜகோபால், பின்னர் அடிக்கடி அவருக்கு போன் செய்து பேசியதாக தெரிகிறது.

மேலும், தவறான நோக்கத்தில் பல்வேறு ஆபாச எஸ்எம்எஸ்களை அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து அப்பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து, அந்த பெண் தரப்பினர் பழநி டிஎஸ்பி தனஞ்ஜெயனிடம் எஸ்எம்எஸ் ஆதாரத்துடன் எஸ்ஐ ராஜகோபால் மீது புகார் அளித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், எஸ்ஐ ராஜகோபால் மதுரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், ராஜகோபால் ஆபாச எஸ்எம்எஸ்கள் அனுப்பி தொந்தரவு செய்தது உறுதியானது.  இதையடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து டிஐஜி சசிமோகன் நேற்று உத்தரவிட்டார். வேலியே பயிரை மேய்ந்த கதையாக, காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த பெண்ணிற்கு எஸ்ஐயே ஆபாச எஸ்எம்எஸ்கள் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: