கோவை: கோவையில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்தது ஏன்? என கொலையாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கோவை மாவட்டம், சூலூர் அருகே பள்ளப்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழில் செய்யும் தம்பதியின் 10 வயது மகள் 4ம் வகுப்பு படித்து முடித்து, 5ம் வகுப்பில் சேர இருந்தார். கடந்த 21ம் தேதி சிறுமி மாலை நேரத்தில் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது பைக்கில் வந்த வாலிபர் அழைத்து சென்றார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கண்ணம்பாளையத்தில் உள்ள குளக்கரை அருகே சிறுமி கொடூரமாக கொல்லப்பட்டு சடலமாக கிடந்தார். அவரை பலாத்காரம் செய்து படுகொலை செய்த பக்கத்து வீட்டில் வசிக்கும் நாகப்பட்டினத்தை சேர்ந்த கார்த்தி(30), உடந்தையாக இருந்த அவரது நண்பரான மோகன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். போலீசாரிடம் தப்பிக்க முயன்றபோது கை, கால் உடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்தி, அங்கு சிறை கைதிகள் வார்டிற்கு மாற்றப்பட்டார்.
முன்னதாக போலீஸ் விசாரணையில் கார்த்தி அளித்த வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது: சம்பவம் நடந்த நாளில் கார்த்தி மது அருந்தியுள்ளார். அப்போது வீட்டருகே சிறுமி விளையாடி கொண்டிருந்ததை பார்த்த கார்த்தி அவரிடம் சாக்லேட் வாங்கி தருகிறேன் வா என கூறி பைக்கில் அழைத்து சென்றார்.
பின்னர் பாப்பம்பட்டி பிரிவு அருகே பைக்கை நிறுத்தி ஒரு கடையில் சாக்லேட் வாங்கி வந்துள்ளார். அப்போது மது போதையில் இருந்ததால் புத்தி பேதலித்து, சிறுமியை கண்ணம்பாளையம் குளக்கரை எதிரே உள்ள ஒரு தென்னந்தோப்புக்கு அழைத்து சென்று சிறுமியை கார்த்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அப்போது சிறுமி சத்தம் போட்டதால் கழுத்தை நெரித்து கொலை செய்து முட்புதரில் சிறுமியை போட்டு விட்டு தப்பி உள்ளார். இதனை அவர் வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசார் கூறினர். இதனிடையே இவ்வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
* சிறுமியின் தாயுடன் செல்போனில் விஜய் பேச்சு
சிறுமியின் தாயார் வீட்டிற்கு நேற்று வந்த மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ் சிறுமியின் தாயை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது அமைச்சர் விக்னேஷ் செல்போனில் தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு போன் மூலம் தொடர்பு கொண்டு சிறுமியின் தாயாரிடம் பேச கொடுத்துள்ளார். அப்போது பேசிய முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்ததோடு குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத்தர அரசு எல்லா நடவடிக்கையும் எடுத்து வருவதாக கூறியுள்ளார்.
* 3 முறை எப்ஐஆர் மாற்றம்
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததில் கைதான கார்த்தி, மோகன்ராஜ் ஆகியோர் மீது எப்ஐஆர் 3 முறை மாற்றப்பட்டு கூடுதல் சட்டப்பிரிவுகள் சேர்த்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘சூலூரில் சிறுமியை காணவில்லை என்ற புகாரின் அடிப்படையில் 21ம் தேதி சிறுமி காணவில்லை என என்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கார்த்தி மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவுகள் கொலை 103(1), 140(1) மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளும், 23ம் தேதி (நேற்று முன்தினம்) பிஎன்எஸ் சட்டப்பிரிவுகள் 87, 127(2), 65(2), 103(1) மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகள் 6 உடன் இணைத்து 16 மற்றும் 17ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மொத்தம் 9 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கு உடந்தையாக இருந்த மோகன்ராஜ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது’. என்றனர்.
* தாய்க்கு தெரியாமல் தந்தைக்கு பணம் தந்து சிறுமி உடல் தகனம்: சித்தி திடீர் புகார்
சிறுமியின் சித்தி அளித்த பேட்டியில், சிறுமி கொலையில் நியாயம் கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்தோம். இன்று பேசிய முதலமைச்சர் முன்பே பேசியிருந்தால் நாங்கள் உடலை வாங்க தயாராக இருந்தோம். ஆனால் ஆறுதல் கூட தெரிவிக்காததால் தொடர்ந்து உடலை வாங்க மறுத்து வந்தோம். ஆனால் போலீசார் சூழ்ச்சி செய்து தந்தையை மட்டும் தனியாக அழைத்துச் சென்று அவரிடம் கையொப்பம் பெற்றுக் கொண்டு உடலை ஒப்படைத்துள்ளனர்.
மேலும் சிறுமியின் உடலை மருத்துவமனையின் பின் வாசல் வழியாக எங்களுக்கு தெரியாமல் ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிறுமியின் தந்தைக்கு கட்சியினர் மற்றும் பல்வேறு நபர்கள் பணம் கொடுத்து ஆசை வார்த்தை கூறி பெற்ற தாய்க்கு கூட தெரியாமல் உடலை அனுப்பி வைத்துள்ளனர். தகவல் அறிந்து நாங்கள் பஸ் மூலம் சேலம் மாவட்டம் மேட்டூர் சென்ற போது குழந்தையின் சடலம் தகனம் செய்யப்பட்டு அனைத்து சடங்குகளும் முடிந்து இருந்தது.
சிறுமி கொலை தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் இருக்கும் நிலையில் நாங்கள் நீதிமன்றத்தை நாட குடும்பத்தினரிடம் கலந்து ஆலோசித்து வருகிறோம். சந்தேகம் இருக்கும் பட்சத்தில் உடலை தோண்டி கூட எடுக்கக் கூடாது என்று திட்டமிட்டு உடலை தகனம் செய்துள்ளனர் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
* சிறுமி பாலியல் கொலை கேள்விக்கு சிரித்து பதிலளித்த அமைச்சர் கீர்த்தனா
தவெக அரசில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, எம்எல்ஏ பதவியேற்பு விழாவில் சான்றிதழை மறந்து விட்டுசென்றதும், மாற்றுத்திறனாளிகள் குறித்து பயன்படுத்திய வார்த்தையும் பெரும் சர்ச்சை மற்றும் கண்டனத்துக்கு உள்ளானது. இதையடுத்து மன்னிப்பு கோரினார். இவருக்கு அரசு சார்பில் வழங்கிய காரில் தவெகவினர் ஊர் சுற்றியதும் பிரச்னையானது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தாமத வருகை, லோக்கல் எம்எல்ஏக்களை மதிக்காதது என இவரைப்பற்றி பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் அமைச்சர் கீர்த்தனா, நேற்று முன்தினம் விருதுநகரில் நேற்று பேட்டி அளிக்கும்போது, கோவை சிறுமி கொலை வழக்கு தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘என் துறைக்கு உட்பட்டதை கேளுங்கள். அரசியல் கேள்விகள் வேண்டாம்’ என சிரித்தபடியே பதில் கூறியது சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகியது.
தேர்தலின்போது பெண்களுக்கு எதிரான கொடுமைகளை நரம்பு புடைக்க பேசி வந்த கீர்த்தனா, அமைச்சரானதும் தமிழகமே பற்றி எரியும் கோவை சிறுமி பாலியல் கொலை வழக்கு தொடர்பான கேள்விக்கு சிரித்தபடி பதிலளித்ததற்கு கடும் கண்டனங்களை அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து அமைச்சர் கீர்த்தனா, தனது உடல்மொழி தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு முக்கியம் என்று விளக்கம் அளித்துள்ளார்.
* அரசு அதிகாரிகள் கணவர் மீது சிறுமியின் தாய் குற்றச்சாட்டு
சிறுமியின் தாய் நேற்றிரவு செய்தியாளர்களிடம் கூறியதாவது: உடற்கூறாய்வு செய்த பிறகு மகளை கண்ணில் காட்டவில்லை. பின் வாசல் வழியாக ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு சென்றுவிட்டனர். வாடகைக்கு கார் பிடித்து உறவினர்களுடன் மேட்டூர் சென்றோம். நாங்கள் அங்கு செல்வதற்குள் எனது சம்மதம் இல்லாமல் சடலத்தை எரியூட்டி விட்டனர். நான் குழந்தையின் முகத்தை கூட பார்க்கவில்லை. சிறுமியின் கொலை சம்பவம் தொடர்பாக ஏதாவது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் சடலம் தேவை.
ஆனால் எரித்து விட்டதால் இப்போது எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது. என் கணவரிடம் போலீசார் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. நான் கையெழுத்து போட மாட்டேன் என்று கூறிய பிறகு என்னுடைய ஒப்புதல் இல்லாமல் கணவரிடம் கையெழுத்து பெற்று உடலை ஒப்படைத்துவிட்டனர். எதற்காக இப்படி போலீசார் செய்தனர் என்பது தெரியவில்லை. நாங்கள் மேட்டூர் சென்றபோது என்னை அடிக்க வந்தனர். மிரட்டல் விடுத்தனர்.
எனவே கணவர் மீது புகார் அளிக்க முடிவு செய்துள்ளேன். குழந்தையை காணவில்லை என்று தேடிக்கொண்டிருந்த போது கொலையாளி கார்த்தியின் 2வது மனைவியும் எங்களுடன் சேர்ந்து தேடினார்.எங்களை திசை திருப்பும் நோக்கில் செயல்பட்டுள்ளதால் அவர் மீதும் சந்தேகம் உள்ளது. அரசு அதிகாரிகளின் அழுத்தம் காரணமாகவே அவசர அவசரமாக குழந்தையின் சடலத்தை எரியூட்டி உள்ளனர்.
எனக்கு மதுபழக்கம் உள்ளதாக அவதூறு பரப்பி வருகின்றனர். சம்பவத்தன்று எனது கணவர் குளிர் பானத்தில் மதுவை கலந்து வைத்திருந்தார். அது தெரியாமல் நான் எடுத்து குடித்துவிட்டேன். அதனால் தான் மயக்கநிலையில் இருந்தேன். கணவர் அழைத்து சென்ற எனது மகனை என்னிடம் ஒப்படைக்க வேண்டும். கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
