சென்னை: இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணிக்கும் இந்திய ரயில்வேக்கு இப்போது மிகப்பெரிய நிதி நெருக்கடி வந்திருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக செலுத்தாமல் தவிர்த்து வந்த மின்சார கட்டணத்தை இனி கட்டாயம் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மொத்த தொகை சுமார் ரூ.15,000 கோடி என்று மதிப்பிடப்படுகிறது.
என்ன நடந்தது என்றால் ரயில்வே ஓட என்னென்ன தேவை? லோக்கோமோட்டிவ், சிக்னல் விளக்குகள், நிலைய வசதிகள் இவை அனைத்துக்கும் மின்சாரம் வேண்டும். இந்த மின்சாரத்தை ரயில்வே நேரடியாக சந்தையில் இருந்து வாங்குகிறது. இப்படி நேரடியாக வாங்கும்போது மின்சார நிறுவனங்களுக்கு சேவை கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் 2015 முதலே ரயில்வே இந்த கட்டணத்தை செலுத்த மறுத்து வந்தது.
இதற்கு ரயில்வே என்ன சாக்கு சொன்னது? என்றால் ‘‘நாங்கள் சாதாரண நுகர்வோர் இல்லை, நாங்களே ஒரு மின்சார விநியோக நிறுவனம் போன்றவர்கள். ஏனென்றால் நாங்களே தண்டவாளங்களுக்கும் நிலையங்களுக்கும் மின்சாரம் விநியோகிக்கிறோம். எனவே எங்களுக்கு இந்த கட்டணம் பொருந்தாது ” என்று வாதிட்டது. ஆரம்பத்தில் மத்திய மின்சார ஆணையம் ரயில்வேக்கு சாதகமாக தீர்ப்பும் கொடுத்தது. அதனால் ரயில்வே பத்து ஆண்டுகளாக கட்டணம் கட்டாமல் தப்பித்து வந்தது.
ஆனால் மாநில மின்சார நிறுவனங்கள் இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றன. இறுதியில் உச்ச நீதிமன்றம் இந்த மே மாதம் தெளிவான தீர்ப்பு கொடுத்தது. ‘‘மின்சார விநியோக நிறுவனம் என்று அழைக்கப்பட வேண்டுமென்றால், வெளி மக்களுக்கும் மின்சாரம் விற்க வேண்டும். ரயில்வே வாங்கும் மின்சாரம் முழுவதும் தனக்காகவே பயன்படுத்திக் கொள்கிறது. எனவே ரயில்வே ஒரு சாதாரண நுகர்வோரே எனவே கட்டணம் கட்டியே ஆக வேண்டும்” என்று தெளிவாக சொன்னது.
இந்த உத்தரவால் ரயில்வேக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது எவ்வளவு பெரிய நஷ்டம் என்றால் இந்திய ரயில்வே ஆண்டுக்கு 33 பில்லியன் யூனிட் மின்சாரம் உபயோகிக்கிறது. இது நாட்டின் மிகப்பெரிய மின்சார நுகர்வோர்களில் ஒன்று. யூனிட்டுக்கு ரூ.0.50 முதல் ரூ.2.50 வரை கட்டணம் என்று வைத்தாலும், பத்து ஆண்டு நிலுவை கணக்கில் சேர்ந்து மொத்தம் சுமார் ரூ.15,000 கோடி ஆகிறது. இது ஒரு சிறிய தொகை இல்லை புதிய ரயில் வாங்கவோ, தண்டவாளம் அமைக்கவோ பயன்படுத்தக்கூடிய பெரும் தொகை ஆகும்.
இனி என்ன ஆகும் என்றால் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மின்சார நிறுவனங்கள் ரயில்வே எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தியது என்று கணக்கிட்டு பில் அனுப்பும். ரயில்வே அந்த கணக்கை சரிபார்க்கலாம், ஆட்சேபணை தெரிவிக்கலாம். இறுதியில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இறுதி தொகையை நிர்ணயிக்கும்.
இதனால் இது பொதுமக்களை பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக ரயில்வேக்கு இந்த பெரும் தொகை கட்ட வேண்டி வரும்போது, அந்த நஷ்டத்தை ஈடுகட்ட டிக்கெட் விலையை உயர்த்தும் என்று கூறப்படுகிறது. போதுமான நிதி இல்லாததால் புதிய ரயில்கள், நவீன வசதிகள், தண்டவாள மேம்பாட்டு திட்டங்கள் தாமதமாகும் அபாயம் உள்ளது.
