விசிகவில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு விலகல்

சென்னை: விசிகவில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு விலகுவதாக அறிவித்துள்ளார். “எடுக்கும் நிலைப்பாட்டில் உறுதியாக இல்லாமல், அடிக்கடி மாற்றி, குழப்பத்திலும் அவநம்பிக்கையிலும் செயல்படும் ஒரு தலைமையின் கீழ் இனியும் என்னால் பயணிக்க இயலாது” என அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பனையூர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில்:
புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மாமேதை கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் கருத்தியல்களையும் கோட்பாடுகளையும் தமிழ் சமூகத்தின் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித்தமிழர் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்களின் பங்கு அளப்பரியது. ஒடுக்கப்பட்ட மக்களை ஓர் அமைப்பாகத் திரட்டி, அவர்களை அதிகாரத்தை நோக்கி நகர்த்தியவர் அண்ணன் எழுச்சித்தமிழர்.

புரட்சியாளர் அம்பேத்கரின் “கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்” என்ற தாரக மந்திரத்தை உயிர் மூச்சாகக் கொண்டு, சாதி வெறி மற்றும் மத வெறி சக்திகளை அடையாளம் கண்டு அவர்களைச் சமரசமின்றி எதிர்ப்பதில் இந்திய அரசியல் களத்திலேயே அவருக்கு நிகர் யாருமில்லை என்றுதான் நான் முழுமையாக நம்பினேன். என்ன நெருக்கடி வந்த போதிலும், பதவிகளோ பரிசுகளோ ஆசை காட்டப்பட்ட போதும், ஏற்றுக் கொண்ட கொள்கையில் மலை போல் உறுதியாக இருப்பார் என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே லட்சோப லட்சம் சிறுத்தைகளைப்போல் நானும் அவரை எனது தார்மீக தலைவராக ஏற்றுக்கொண்டு அவர் பின்னால் அணிவகுத்தேன்.

கடந்த 2007-ஆம் ஆண்டு முதன்முதலில் அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்களுக்கு அறிமுகமானேன். அப்போதிருந்து எனது அரசியல் பயணம் அண்ணனோடு தொடங்கியது. வெவ்வேறு அரசியல் இயக்கங்களில் செயலாற்றிக் கொண்டிருந்த 5000-க்கும் மேற்பட்ட தம்பிமார்களை ஒருங்கிணைத்து, சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலையில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து, அவர்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் அதிகாரபூர்வமாக இணைந்தேன்.

இயக்கத்தில் நான் ஆற்றிய பணியை அங்கீகரித்து, 2009-ஆம் ஆண்டு ‘இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை’யின் மாநிலச் துணை செயலாளர் பொறுப்பை அண்ணன் அவர்கள் எனக்கு வழங்கினார்; அந்தப் பணியைத் திறம்படச் செய்தேன். ஊடகங்கள் நமது இயக்கத்தையும், நமது தலைவரின் குரலையும் இருட்டடிப்புச் செய்து ஓரங்கட்டப் பார்த்தபோது, இதனை எதிர்கொள்ள இயக்கத்திற்கென்று ஒரு தனி ஊடகம் உருவாக வேண்டும் என்ற சிந்தனை உருவானது. அப்போது, ‘வெளிச்சம்’ தொலைக்காட்சியை நிறுவும் முக்கியப் பொறுப்பைத் அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார். அதனை ஏற்று, அதன் வளர்ச்சிக்காக முழு அர்ப்பணிப்புடன் உழைத்து, அனைத்து ஒளிபரப்புத் தளங்களிலும் அது தடையின்றி வெளிவரச் செய்து, வெளிச்சம் தொலைக்காட்சியைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு போய்ச் சேர்த்தேன். இதனை தொடர்ந்து 2016-ல் ‘ஊடகப் பிரிவின்’ முதன்மைச் செயலாளர் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது; அதிலும் சிறப்பாகப் பணியாற்றினேன். அதன் தொடர்ச்சியாக, 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் செய்யூர் தொகுதியில் போட்டியிடும் அரிய வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது.

நான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினராகச் சட்டமன்றத்திலும், எனது செய்யூர் தொகுதியிலும் மக்கள் பணிகளைத் திறம்படச் செய்துள்ளேன். கடந்த ஐந்து ஆண்டுகளில், சட்டமன்றத்திலும் தொகுதியிலும் நான் நிறைவேற்றிய எண்ணற்ற மக்கள் பணிகளில், வரலாற்றில் நிலைத்து நிற்கும் சில முக்கியச் சாதனைகளை மட்டும் இங்கே நினைவுகூர விரும்புகிறேன். சட்டமன்றத்தில், ஆதி திராவிடர் மக்களின் உரிமைக்காக நமது இயக்கத்தின் சார்பாக நான் முன்வைத்த பல முக்கிய கோரிக்கைகள் செயல்வடிவம் பெற்றுள்ளன.

பரமக்குடியில் சாதி எதிர்ப்பு சுயமரியாதைப் போராளி இமானுவேல் சேகரன் அவர்களுக்கு மணிமண்டபம், ஆதி திராவிடர் பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதிய அடையாளங்களை நீக்கியது, தாத்தா இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபம், அய்யா பெருந்தலைவர் எல். இளையபெருமாள் அவர்களுக்குச் சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவு அரங்கம் மற்றும் சர்வதேச தரத்தில் எம்.சி. ராஜா மாணவர் விடுதி புதிய கட்டிடம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டலாம். எமது இக்கோரிக்கைகளின் நியாயத்தை உணர்ந்து, அவற்றை அரசாணைகளாக மாற்றித் தந்த மாண்புமிகு மேனாள் முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இந்தத் தருணத்தில் எனது நெஞ்சார்ந்த நன்றியைப் பதிவு செய்கிறேன்.

அதேபோல, கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் செய்யூர் தொகுதியில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். செய்யூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புதிய சிப்காட் (SIPCOT) தொழிற்பேட்டை, அரசு மருத்துவமனை ஆகிய மாபெரும் திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறேன். விவசாயிகள் பயன்பெறும் வகையில் தொகுதி முழுவதும் 28 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்துள்ளேன். மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வலைப்பின்னல் கூடங்கள், கடல் சீற்றத்தால் ஏற்படும் கடல் அரிப்பைத் தடுத்துக் குடியிருப்புகளைப் பாதுகாக்கக் கடலோரங்களில் கருங்கல் கொட்டும் தடுப்புச் சுவர்கள் என எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளேன். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, 10,000-க்கும் மேற்பட்ட எனது தொகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கிக் குடிமர்த்தியுள்ளேன். இந்த அருஞ்செயல்களைச் செய்வதற்கு எனக்கு வாய்ப்பளித்த அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்களுக்கும், மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கும், என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த செய்யூர் தொகுதி மக்களுக்கும், களத்தில் தோளோடு தோள் நின்ற இயக்கத் தோழர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன். இப்படிப்பட்ட மக்கள் பணிகளை, அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்கள் ஊட்டிய கொள்கை உணர்வோடுதான் இதுநாள் வரை எவ்வித சமரசமுமின்றி முன்னெடுத்து வந்தேன். அந்தக் கொள்கை உறுதியும், சித்தாந்தத் தெளிவுமே எங்களைப் போன்ற இயக்கத் தோழர்களுக்கு உந்துசக்தியாக இருந்து வந்தன. ஆனால், அந்த அடிப்படை அரசியல் அறம் தடம் மாறும் போது என்னால் மௌனமாகக் கடந்து செல்ல முடியவில்லை. மிகுந்த மனவேதனையோடு ஒரு யதார்த்தத்தை இங்குப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு நான் தள்ளப்பட்டுள்ளேன்.

சமீப காலங்களாகத் தலைமையின் செயல்பாடுகளும், அரசியல் நிலைப்பாடுகளும் எனக்குப் பெரும் வியப்பையும் வேதனையையும் அளிக்கின்றன. ஒரு தெளிவான நிலைப்பாடின்றி, அடிக்கடி தடுமாறுவது அவரது இயல்பல்ல. நேற்று ஒரு நிலைப்பாடு, இன்று தொலைக்காட்சி நேர்காணலில் ஒரு நிலைப்பாடு, நாளை செய்தியாளர் சந்திப்பில் வேறொரு நிலைப்பாடு, மீண்டும் இரவில் சமூக வலைத்தள நேரலையில் (Facebook Live) முற்றிலும் முரணான ஒரு நிலைப்பாடு எனத் தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது, அரசியல் களத்திலும் தொண்டர்களிடையேயும் பெரும் குழப்பத்தை உருவாக்குகிறது. நேற்று வரை ஒரு நடிகரை ‘ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி பெற்றெடுத்த பிள்ளை’ என்று கடுமையாக விமர்சித்த அவர், இன்று அதே பிள்ளையைத் தத்தெடுப்பது போல் நிலைப்பாடு எடுப்பது, அவர் இதுகாலம் வரை சமரசமின்றி கட்டிக்காத்த கொள்கைகளிலும், கருத்தியலிலும் தடம்மாறத் தயாராகிவிட்டார் என்பதையே அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

“விசில் அடிப்பவர்கள் எல்லாம் திரையரங்கத்திற்குத்தான் செல்ல வேண்டும், சட்டமன்றத்திற்கு வரக் கூடாது; அவர்கள் பெரியாரும் அம்பேத்கரும் பேசிய அரசியலையும், கொள்கைகளையும் வீழ்த்துவதற்கு வந்தவர்கள்” என்று சூளுரைத்த அவர், இன்று அவர்களுடனே கைகோர்க்கவும், இயக்கத்தின் கொள்கையை மழுங்கடிக்கவும் முற்படுவது முரண்பாட்டின் உச்சமாகும். ஆட்சி அதிகாரங்கள் வரும், போகும்; அது நிலையற்றது. ஆனால், அய்யா பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் நமக்கு வகுத்துத் தந்த கொள்கைகளே என்றென்றும் வாழும் நிலையான ஆயுதங்கள். அரசியல் தளத்தில், “மக்கள் சித்தாந்தங்களை விடக் கவர்ச்சியின் பின்னால் ஈர்க்கப்படுவது ஆபத்தானது” என்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனால் இன்று அந்த அபாயகரமான திசையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோமோ என அஞ்சுகிறேன்

கொண்ட கொள்கையிலும், எடுக்கும் நிலைப்பாட்டிலும் உறுதியாக இல்லாமல், அடிக்கடி நிலைப்பாடுகளை மாற்றி, குழப்பத்திலும் அவநம்பிக்கையிலும் செயல்படும் ஒரு தலைமையின் கீழ் இனியும் என்னால் பயணிக்க இயலாது என எனது மனசாட்சி உணர்த்துகிறது. எனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் முழுமையாக விலகுகிறேன் என்ற எனது முடிவைக் கனத்த இதயத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் கட்சியிலிருந்து விலகினாலும், அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட கொள்கைகளிலும், கருத்தியலிலும் இம்மியளவும் பின்வாங்காமல் உறுதியாக நின்று பயணிப்பேன். புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மாமேதை கார்ல் மார்க்ஸ் ஆகியோர் காட்டிய வழியில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கான எனது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: