×

ஐஏஎஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட பதவிக்கான முதல் நிலை தேர்வு தொடங்கியது: இந்தியா முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் எழுதுகின்றனர்

சென்னை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட 21 வகையான பதவிகளுக்கான ேதர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 933 பதவிகளை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு இந்தியா முழுவதும் 79 நகரங்களில் இன்று காலை தொடங்கியது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய 5 நகரங்களில் நடந்தது. சென்னையில் எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அண்ணாநகர் ஜெயகோபால் கரோடியோ பள்ளி, புரசைவாக்கம், வில்லிவாக்கம் உள்பட 82 மையங்களில் யு.பி.எஸ்.சி. தேர்வு நடந்தது. சென்னையில் மட்டும் 16,778 பேர் தேர்வு எழுதினர்.

காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை பொது அறிவு தேர்வும், மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறனறிவு தேர்வும் நடந்தது. வினாக்கள் அனைத்தும் அப்ஜெக்டிவ் வடிவில் இருந்தது. தேர்வு எழுத காலை 7 மணி முதலே தேர்வு கூடங்களுக்கு மாணவ-மாணவிகள் வரத் தொடங்கினர். அவர்கள் கடும் சோதனைக்கு பிறகே தேர்வு கூடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அது மட்டுமல்லாமல் செல்போன், ஸ்மார்ட் வாட்ச், பேஜர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதன பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தேர்வு நடந்த மையங்கள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வுக்கூடங்களுக்கு தேர்வு எழுதுபவர்களை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

Tags : India ,Chennai ,Union Public Service Commission ,UPSC ,IRS ,India… ,
× RELATED தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்றும்...