வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா அலுவலகம் காந்திநகரில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தாசில்தார் நடராஜன் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றார். அவரை ஜீப்பில் அழைத்து சென்று வீட்டில் இறக்கிவிட்டு, டிரைவர் மீண்டும் அலுவலக வளாகத்தில் ஜீப்பை நிறுத்திவிட்டு சென்றார்.
நள்ளிரவு சத்தம் கேட்டதால் அலுவலகத்தின் உள்ளே இருந்த இரவு காவலாளி புருஷோத்தமன்(42), வெளியே வர முயன்றார். அப்போது கதவு வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. மேலும் வெளியே நிறுத்தியிருந்த ஜீப்பும் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. அவர் சத்தம் போடவே அப்பகுதி மக்கள் வந்து கதவை திறந்தனர். அவர்கள் உதவியுடன் ஜீப்பில் எரிந்த தீயை அணைத்தார். அதற்குள் பின்பக்க டயர் முற்றிலும் எரிந்தது.
தகவலின்படி வாலாஜா போலீசார் வந்து விசாரித்தனர். அப்போது மர்ம ஆசாமி ஒருவர் தப்பி ஓடியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் அதேபகுதியை சேர்ந்த செந்தில்குமார்(24) என்பவர் ஜீப்பை எரித்தது தெரியவந்தது. தொடர்ந்து நேற்று மாலை அப்பகுதியில் பதுங்கியிருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் விசாரணையில், கஞ்சா போதையில் எனக்கு திடீரென ஜீப்பை எரிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதனால் எரித்தேன் என தெரிவித்துள்ளாராம். ராணிப்பேட்டை கலெக்டர் அலுலவகம் முன்பு நேற்று முன்தினம் மர்ம நபர்கள் முட்டை, பானை வைத்து மாந்திரீகம் செய்திருந்த நிலையில், தற்போது தாசில்தாரின் ஜீப் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
