சென்னை: தமிழக சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடித்த தவெக எம்எல்ஏக்கள் 8 பேருக்கும் அமைச்சரவையில் பதவி வழங்கி முதல்வர் விஜய் அழகு பார்த்த தகவல் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப் பேரவை தேர்தலில் 108 இடங்களில் தவெக வென்றது. இந்த சூழ்நிலையில், திமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரசிடம் ஆட்சி அமைக்க ஆதரவு தர தவெக அழைப்பு விடுத்த அடுத்த நொடியே நாலு கால் பாய்ச்சலில் சென்று ஆதரவு வழங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துகூட தெரிவிக்காமல் தவெகவுக்கு ஆதரவு வழங்கியதோடு அடுத்தடுத்த தேர்தல்களில் தவெக கூட்டணியில் இணைகிறோம் என்றும் அறிவித்தது.
இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவமும் நடந்துள்ளது. அதாவது, சட்டப் பேரவை தேர்தலின் போது முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் விஜய் பாலாஜி, குமார், ராஜீவ், ராஜ்குமார், டி.கே.பிரபு, முகமது பர்வேஸ், கீர்த்தனா, தென்னரசு ஆகியோர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை தோற்கடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைச்சர் விஜய் பாலாஜி, காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் பழனியப்பனை 23,966 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
அமைச்சர் ஆர்.குமார் வென்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக அசன் மவுலானா போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவருக்கு 3வது இடம்தான் கிடைத்தது. அமைச்சர் ராஜீவ், தாம் போட்டியிட்ட திருவாடனை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.எம். கருமாணிக்கத்தை 2,513 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
அமைச்சர் ராஜ்குமார் தாம் போட்டியிட்ட கடலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சந்திரசேகரனை 15,519 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அமைச்சர் டி.கே.பிரபு, காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாங்குடியை 46,074 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
அமைச்சர் முகமது பர்வேஸ் தாம் போட்டியிட்ட அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் டி.ராமச்சந்திரனை 10,062 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அமைச்சர் கீர்த்தனா, சிவகாசி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஜி.அசோகனை 11,670 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை 54,246 வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சர் தென்னரசு தோற்கடித்தார். இப்படி காங்கிரஸ் வேட்பாளர்களை சூறையாடி வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏக்கள் 8 பேருக்கு முதல்வர் விஜய் அமைச்சர் பதவி வழங்கி அழகு பார்த்த சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அத்துடன் முதல்வர் விஜய் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் அமைச்சர்களாகவும் பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
