வெளிநாட்டவர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டபுதிய கிரீன்கார்டு சட்டத்தால் 12 லட்சம் இந்தியர்கள் பாதிப்பு? அமெரிக்காவிலேயே கிளம்பியது கடும் எதிர்ப்பு

 

நியூயார்க்: வெளிநாட்டவர்களுக்கு எதிரான புதிய கிரீன்கார்டு சட்டத்திற்கு அமெரிக்காவிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த சட்டத்தால் 12 லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படலாம் என்ற கருத்து எழுந்துள்ளது. அமெரிக்க அரசு சார்பில் புதிய கிரீன் கார்டுக்கான விதிகள் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன.

அதன்படி தற்காலிக விசாக்களில், அதாவது சுற்றுலா அல்லது வேலை விசா அடிப்படையில் அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்கள், அங்கிருந்தபடியே கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாது. அதற்குப் பதிலாக, அவர்கள் தங்களது சொந்த நாட்டிற்குத் திரும்பிச் சென்று, அங்கிருந்துதான் புதிய கிரீன் கார்டு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்குவதைத் தடுக்கவும், முறையான குடியேற்றச் சட்டங்களை உறுதிப்படுத்தவும் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. மிகவும் அசாதாரணமான மற்றும் அவசரமான சூழ்நிலைகளில் மட்டுமே இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த புதிய உத்தரவுக்கு அமெரிக்காவிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. புதிய கிரீன் கார்டு கோருவோர் தங்கள் சொந்த நாட்டிலிருந்து விண்ணப்பிக்க வேண்டும் என்று கோரும் டிரம்ப் நிர்வாகத்தின் புதிய கொள்கையை, அமெரிக்க சட்டமியற்றுபவர்களும் குடியேற்ற ஆதரவாளர்களும் பொறுப்பற்றது மற்றும் தவறானது என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மேலும் இந்த புதிய கொள்கை எச்1பி விசாக்களில் உள்ள திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கும் இந்த விலக்குகள் நீட்டிக்கப்படுமா என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை. இதுபற்றி முன்னாள் அதிபர் பைடனின் வெள்ளை மாளிகை ஆலோசகரும், டிரம்ப் நிர்வாகத்தின் புதிய கிரீன்கார்டு செயலாக்க கொள்கைகளுக்கான குடியேற்ற வக்கீலுமான அஜய் பூடோரியா கூறுகையில்,’ஒவ்வொரு சட்டத்தையும் பின்பற்றி, வரிகளைச் செலுத்தி, பல ஆண்டுகளாக சட்டப்பூர்வமாக காத்திருந்த 12 லட்சம் இந்திய அமெரிக்கர்களையும் அவர்களது குடும்பங்களையும் இந்த சட்டம் ஒரு நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளுகிறது. இந்த புதிய கொள்கையை எதிர்த்து பல்வேறு குழுக்கள் வழக்குகள் தாக்கல் செய்யும்’ என்றார்.

இதற்கு முந்தைய கிரீன்கார்டு கொள்கையானது, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அமெரிக்காவிற்குள் இருந்தபடியே தகுதி மாற்றத்திற்கு விண்ணப்பிப்பதன் மூலம், குடியேறாதவர் நிலையிலிருந்து குடியேறியவர் நிலைக்கு மாற அனுமதித்தது. இப்போதைய சட்டம் கிரீன்கார்டு விண்ணப்பிக்கும் நபர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப அறிவுறுத்துவதால் வெளிநாட்டவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதால் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

* இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பு

அமெரிக்காவில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய குடியேற்ற விசா மற்றும் கிரீன் கார்டு விதிமுறைகள், குறைந்தபட்ச சம்பள வரம்பை உயர்த்தியிருப்பதால் அதிக வருமானம் ஈட்டும் அனுபவமிக்க இந்தியர்களுக்கு நன்மையும், புதிய பட்டதாரிகளுக்குப் பின்னடைவையும் ஏற்படுத்துகிறது. ஆண்டுதோறும் வழங்கப்படும் எச்1பி விசாக்களில் 70% இந்தியர்களுக்கே ஒதுக்கப்படுவதால், இந்த புதிய மாற்றங்கள் இந்தியாவை நேரடியாகப் பாதிக்கின்றன. 2026 மே மாத விசா அறிவிப்பின்படி, இந்தியர்களின் இபி-2 மற்றும் இபி-3 பிரிவுகளின் இறுதிச் செயல் தேதிகள் 2013 மற்றும் 2014க்கு முந்தைய நிலையிலேயே உள்ளன.

Related Stories: