பெரம்பலூர், மே 23: பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது என்று மாவட்டக் கலெக்டர் ந.மிருனாளிணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு, கலை பண்பாட்டுத் துறையின் சார்பில், பெரம்பலூர் மாவட்டத்தில் இசைப்பள்ளி 1998 ஆம்ஆண்டு தொடங்கப் பட்டு சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு சிறப்பாக செயல் பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2026-2027ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரத நாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் மூன்று ஆண்டுகள் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பள்ளியில் 13வயது முதல் 25 வயது வரையுள்ள மாணவர்கள் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்.
