ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்ற பெயரில் மேற்குவங்கத்தில் பாஜக அரசு ‘புல்டோசர்’ வேட்டை: போலீசார் தடியடி; 1,000 வியாபாரிகள் கண்ணீர்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற புல்டோசர்கள் மாநிலம் முழுவதும் களமிறக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சில நாட்களிலேயே, பாஜக முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான அரசு சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. முன்னதாக, கொல்கத்தாவின் டோப்சியா-திலஜலா பகுதியில் உள்ள சட்டவிரோத தோல் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் உள்ள சட்டவிரோத கட்டிடங்களை உடனடியாக இடிக்க முதல்வர் உத்தரவிட்டார். கொல்கத்தா மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய ஆய்வில், அந்தப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் கட்டப்பட்ட கட்டிடங்களில் 70 சதவீதம் சட்டவிரோதமானவை எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சுமார் 1,000 கட்டிடங்களை இடிக்க அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

கடந்த 12ம் தேதியன்று திலஜலா பகுதியில் புல்டோசர்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டபோது, ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பூங்கா சர்க்கஸ் பகுதியில் நடந்த போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் கற்களை வீசித் தாக்கியதில் 10 போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர். கூட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். தொடர்ந்து, கொல்கத்தாவின் மிக முக்கியமான ஹவுரா மற்றும் சீல்டா ரயில் நிலையப் பகுதிகளில் சுமார் 500 நடைபாதை கடைகள் மற்றும் சட்டவிரோத கட்டமைப்புகள் புல்டோசர்கள் கொண்டு தரைமட்டமாக்கப்பட்டன.

ஹவுரா ரயில் நிலையப் பகுதியில் மட்டும் 150 கடைகள் மற்றும் 200 ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றப்பட்டனர். சீல்டா ரயில் நிலையத்தில் 1 முதல் 21 வரையிலான பிளாட்பாரங்களை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 250 கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

இது குறித்து அமைச்சர் திலீப் கோஷ் கூறுகையில்,
‘மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களும் சந்தைகளாக மாற்றப்பட்டு குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன. இது வெறும் தொடக்கம் தான், மாநிலம் முழுவதும் இனி புல்டோசர் நடவடிக்கை தொடரும்’ என்றார்.

பல ஆண்டுகளாக வாழ்வாதாரமாக இருந்த கடைகள் உரிய முன்னறிவிப்பின்றி இடிக்கப்பட்டதாகக் கூறி வியாபாரிகள் கண்ணீர் மல்க போராட்டம் நடத்தி வரும் நிலையில், சில பகுதிகளில் இடிப்புப் பணிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் ஜூன் 22ம் தேதி வரை இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: