கோதன்பர்க்: இந்தியாவில் வர்த்தகம் செய்வதற்கு ஸ்வீடன் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மோடி வெளிநாட்டு பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் ஸ்வீடன் சென்றார். ஸ்வீடனுக்கான தனது அதிகாரப்பூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக தொழில்துறைக்கான ஐரோப்பிய வட்டமேஜை மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘‘இந்தியாவில் ஸ்வீடனின் அனைத்து நிறுவனங்களுக்கும் வாய்ப்புகள் நிறைந்துள்ளது.தொழில்நுட்ப புத்தாக்கத்தின் அடுத்த அலை இந்தியாவிலேயே இணைந்து உருவாக்கப்பட வேண்டும். கடந்த 12 ஆண்டுகளாக சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் ஆகிய அடிப்படை மந்திரத்தின் அடிப்படையில் இந்தியா செயல்பட்டு வருகின்றது.அரசின் அரசியல் உறுதியுடன் இந்த சீர்திருத்த விரைவு ரயில் முழுவேகத்தில் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.
ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை, புத்தாக்கம் மற்றும் நிலைத்தன்மை ஆகிய பகிரப்பட்ட விழுமியங்களால் இந்தியாவும் ஸ்வீடனும் பிணைக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் கொண்டுள்ள பலங்களை இந்தியாவின் பரந்த செயல்வீச்சு, திறமை மற்றும் வளர்ச்சி வேகம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட முன்வரவேண்டும். மேக் இந்தியா, தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம், தேசிய முக்கிய கனிமங்கள் இயக்கம் போன்ற முன்னெடுப்புக்களின் கீழ் இந்தியாவில் தங்கள் இருப்பை ஸ்வீடன் நிறுவனங்கள் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார். ஸ்வீடன் பயணத்தை நிறைவு செய்த பின் பிரதமர் மோடி முதல் முறையாக நார்வே சென்றார்.
ஓஸ்லோவின் தரையிறங்கிய அவரை நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் மற்றும் உயர்தலைவர்கள் அவரை வரவேற்றனர். கடந்த 43 ஆண்டுகளில் நார்வே நாட்டுக்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘எனது இந்த நார்வே வருகையானது இந்தியா -நார்வே நட்புறவுக்கும் புத்துணர்ச்சியூட்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடிக்கு விருது
அரசு முறை பயணமாக நார்வே நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆப் மெரிட் அமைப்பின் கிராண்ட் கிராஸ் விருதை அந்நாட்டு மன்னர் 5ம் ஹரால்டு வழங்கி கவுரவித்தார். இது பிரதமர் மோடி பெறும் 32வது சர்வதேச விருதாகும். இதேபோல் நேற்று முன்தினம் ஸ்வீடன் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் ராயல் ஆர்டர் ஆப் தி போலார் ஸ்டார்விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
