×

டெல்லி மெட்ரோவில் கூடுதல் ரயில்கள் மற்றும் புதிய பாதுகாப்பு வசதிகள் அறிமுகம்!

டெல்லி: பிரதமரின் வேண்டுகோளை ஏற்று டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (DMRC) பல்வேறு அதிரடி பாதுகாப்பு மற்றும் வசதி மேம்பாடுகளைச் செய்துள்ளது. அதன்படி, மெட்ரோ நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்த கூடுதல் பாதுகாப்புப் பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

மேலும், கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களிலும் பயணிகள் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்த்து, விரைவாக நிலையங்களுக்குள் நுழைவதற்கு ஏதுவாக கூடுதல் டிக்கெட் கவுண்ட்டர்கள், நவீன பேக் ஸ்கேனிங் இயந்திரங்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர்கள் ஆகியவை அமைக்கப்படவுள்ளன.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையில் QR கோட் மற்றும் ஸ்மார்ட் கார்டு போன்ற டிக்கெட் வசதிகள் மேலும் எளிதாக்கப்பட்டுள்ளதோடு, சாரதி செயலி மூலமாக பயணிகள் தங்களது முழு பயணத்தையும் சுலபமாகத் திட்டமிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் மெட்ரோ நிலையங்களில் இருந்து தங்களது வீடு அல்லது அலுவலகங்களுக்கு எவ்வித சிரமமுமின்றிச் சென்றடைய கடைசி மைல் இணைப்பு வசதி பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் ஈ-ரிக்ஷா, ஈ-ஆட்டோ, பைக் டாக்ஸி மற்றும் சைக்கிள் சேவைகள் மேம்படுத்தப்பட்டு, தினமும் சுமார் 1 லட்சம் பயணிகள் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

இதுமட்டுமன்றி, பொதுமக்கள் தங்களது சொந்த வாகனங்களை மெட்ரோ நிலையங்களிலேயே பாதுகாப்பாக நிறுத்திவிட்டு, அங்கிருந்து மெட்ரோவில் தங்களது பயணத்தைத் தொடர ஏதுவாக 126 முக்கிய மெட்ரோ நிலையங்களில் ‘பார்க் அண்ட் ரைடு’ வாகன நிறுத்துமிட வசதியும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது.

Tags : Delhi Metro ,Delhi ,Delhi Metro Rail Corporation ,DMRC ,
× RELATED மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே நடந்த கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு!