சென்னை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன்(85) அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். தீயணைப்புத் துறையினர் கே.ராஜன் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கே.ராஜன் ‘பிரம்மச்சாரிகள்’ (1983) திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். கணேஷ் சினி ஆர்ட்ஸ் மூலம் பல திரைப்படங்களை தயாரித்த ராஜன், ஸ்ரீமன், அபிதா, அப்பாஸ் மற்றும் குணால் நடித்த ‘உணர்ச்சிகள், மற்றும் ‘நம்ம ஊரு மாரியம்மா’ உள்ளிட்ட படங்களை இயக்கியும் உள்ளார். அவள் பாவம், நினைக்காத நாளில்லை, டபுள்ஸ் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர்.
பாம்பு சட்டை, துணிவு, பரகாசுரன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2000ம் ஆண்டில் சென்னை திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து, சினிமா வர்த்தகத்தில் முக்கியப் பங்காற்றினார். சினிமா துறையில் நடைபெறும் பிரச்சனைகள், தயாரிப்பாளர்கள் சந்திக்கும் நஷ்டங்கள், நடிகர்களின் அதிக சம்பளம் மற்றும் திரையுலகில் உள்ள முறைகேடுகள் குறித்து எந்த தயக்கமும் இன்றி பொதுவெளியில் பேசி வந்தார். இதனால் அவரது பேச்சுகள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன.
இந்நிலையில் கே.ராஜன் இன்று (மே.17) அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தீயணைப்புத் துறையினர் கே.ராஜன் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
