×

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனைமங்கலம் செப்பேடு மீண்டும் இந்தியா திரும்புகிறது; விரைவில் தமிழகம் வர வலியுறுத்துவோம்: சு. வெங்கடேசன் எம்.பி.

மதுரை: வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனைமங்கலம் செப்பேடு மீண்டும் இந்தியா திரும்புகிறது; விரைவில் தமிழகம் வர வலியுறுத்துவோம் என சு. வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவரது சமூக வலைதள பதிவில்;
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இராஜராஜ சோழனால் வழங்கப்பட்ட கொடை உத்தரவு, முதலில் ஓலையில் எழுதப்பட்டுப் பின்னர் இராஜேந்திர சோழனால் செப்பேட்டில் பதிக்கப்பட்டது. அதுவே வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆனைமங்கலம் செப்பேடு’ என்று அழைக்கப்படுகிறது.

சைவ சமயத்தின் தீவிரப் பற்றாளர்களாக விளங்கி, பிரம்மாண்டமான தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சோழ மன்னர்கள், பௌத்தப் பள்ளிகளுக்கும் பெரும் கொடை வழங்கினார்கள் என்பதும்; சோழ நாட்டில் குடியேறியிருந்த வெளிநாட்டு பௌத்த வணிகர்களின் மத உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலமே பன்னாட்டு வணிகம் செழிக்கும் என்ற சோழர்களின் பொருளாதாரத் தொலைநோக்குப் பார்வைக்குச் சான்றாகவும் இந்த ஆனைமங்கலம் செப்பேடு விளங்குகிறது.

டச்சுக் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக நாகப்பட்டினம் இருந்த காலத்தில், இந்தச் செப்பேடு கிறித்தவ மறைப்பணியாளர்களால் பாதுகாக்கப்பட்டு, நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழக ஆவணக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வரலாற்றுப் பெட்டகம் மீண்டும் தமிழகத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலிமையாக எழுந்தது. இந்த பின்னணியில், யுனெஸ்கோவின் (UNESCO) கலாச்சாரப் பொருட்களை மீட்டெடுக்கும் குழுவின் (ICPRCP) 24-ஆவது கூட்டத்தில், இச்செப்பேடுகளைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக முன்வைத்தது.

தொடர்ந்து பல ஆண்டுகள் வலியுறுத்தியதன் பயனாக, நேற்றைய தினம் இந்தியப் பிரதமரிடம் இந்தச் செப்பேடு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்காக இரு நாட்டு அரசுகளுக்கும், இந்தியப் பிரதமருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரலாற்று ஆவணத்தை அறிவுசார் பணிக்கான ஒத்திசைவோடு, தொடர்ந்து பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எமது நன்றி!

இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், கடந்த பத்து ஆண்டுகளில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து மீட்டுவரப்பட்ட 656 தொல்பொருட்களை டெல்லியில் உள்ள “புரானா கிலா” கோட்டையில்தான் ஒன்றிய அரசு வைத்துள்ளது. அவற்றுள் பெரும்பான்மையானவை பொதுமக்களின் பார்வைக்குக் கூட காட்சிப்படுத்தப்படவில்லை.

ஆனைமங்கலம் செப்பேட்டிற்கும் அந்த நிலை வந்துவிடக் கூடாது. தமிழக மற்றும் இந்திய வரலாற்றின் சர்வதேச பரிமாணத்தை, மதம் சார்ந்த அரசியல் போக்கிற்கு மாற்றான பன்மைத்துவ அரசியல் மாண்பை, உள்ளூர் அரசாட்சியின் தேர்ந்த கட்டமைப்பு விபரங்களை ஒருங்கே பறைசாற்றும் இந்த ஆவணம் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்; தமிழகத்தில் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும். இதற்குத் தமிழக அரசும் உரிய முன்முயற்சி எடுக்க வேண்டும்.

சோழர்களின் வழித்தோன்றல் மரபைத் தெளிவுறக் கூறும் “அன்பில் செப்பேடு” இந்திய அரசின் தொல்லியல் துறையால் (ASI) பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால், இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க செப்பேடு இப்போது எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை. அதனைக் கண்டறிய வேண்டிய பொறுப்பு இந்தியத் தொல்லியல் துறை சார்ந்தது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் 300 ஆண்டுகளாக நமது வரலாற்று ஆவணத்தைப் பாதுகாத்து வைத்துள்ளன. ஆனால், இந்திய அரசின் தொல்லியல் துறையோ நமது சிறப்புமிக்க வரலாற்று ஆவணத்தைத் தொலைத்துவிட்டு நிற்கிறது. இதனை மீட்க ஒன்றிய அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்.

நெதர்லாந்திலிருந்து இந்தியா கொண்டுவரப்படுவது வெறும் செப்பேடு அல்ல… செம்மாந்த தமிழக வரலாற்றின் ஆகச்சிறந்த ஆவணமாகும்! அதுமட்டுமல்ல, பிரதமர் மோடியிடம் கையளிக்கப்பட்டுள்ள இந்த ஆவணம், அவர் பின்பற்றும் ஒற்றை மத அரசியலுக்கு எதிராகப் பன்மை மத ஒழுங்கைப் பேணிக்காத்த சோழர்களின் ஆகச்சிறந்த வரலாற்றுச் சான்றாகும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Tags : Historic Anaimangalam Sepaid ,India ,Tamil Nadu ,Shu. ,Venkatesan M. B.. Madurai ,Anaimangalam ,Venkatesan M. B. ,Rajaraja Chozhan ,
× RELATED எந்த ஜென்மத்திலும் சி.வி.சண்முகம்...