×

தேர்தலில் எஸ்ஐஆர் நெருக்கடி ஓய்ந்த நிலையில் மேற்குவங்கத்தில் 1.69 கோடி பேரின் சாதி சான்றிதழ் ரத்து?.. மறு சரிபார்ப்புக்கு உத்தரவிட்டுள்ளதால் கலக்கம்

 

 

கொல்கத்தா: மேற்குவங்க தேர்தலில் எஸ்ஐஆர் நெருக்கடி ஓய்ந்த நிலையில் தற்போது முறைகேடு புகாரில் சிக்கிய 1.69 கோடி ேபரின் சாதி சான்றிதழ் மறுசரிபார்ப்பு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக தகுதியற்ற பலருக்கு சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் எழுந்து வந்தன. குறிப்பாக, கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜவிடம் இழந்த செல்வாக்கை மீட்கும் நோக்கில், அப்போதைய திரிணாமுல் காங்கிரஸ் அரசு 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக ‘துவாரே சர்க்கார்’ (மக்களை தேடி அரசு) என்ற திட்டத்தை 2020ம் ஆண்டின் பிற்பாதியில் தொடங்கியது.

இந்த முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், உரிய சரிபார்ப்புகள் ஏதுமின்றி அவசர அவசரமாக 32.51 லட்சம் எஸ்சி, 6.65 லட்சம் எஸ்டி மற்றும் 8.64 லட்சம் ஓபிசி சான்றிதழ்கள் என மொத்தம் சுமார் 47.8 லட்சம் சான்றிதழ்கள் தகுதியற்ற பலருக்கு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த போலி சான்றிதழ்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களது அடுத்த தலைமுறையினருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதால், தங்களுக்குரிய அரசு வேலைவாய்ப்பு மற்றும் இடஒதுக்கீடு சலுகைகள் பறிபோகும் என்று உண்மையான எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனால், சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் ஜங்கிள் மகால் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் பெரும் பின்னடைவைச் சந்தித்ததுடன், பாஜக பெரும்பாலான இடங்களைக்கைப்பற்றியது. இந்த நிலையில், கடந்த 2011ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட சாதி சான்றிதழ்களின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு தரப்பிலிருந்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதால், அவற்றை வழங்கிய கோட்டாட்சியர் (சார்-ஆட்சியர்) போன்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி அனைத்து சான்றிதழ்களையும் மறுசரிபார்ப்பு செய்ய வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2011ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட 1.69 கோடி பட்டியல் இனம் (எஸ்சி), பழங்குடியினம் (எஸ்டி) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஓபிசி) சாதி சான்றிதழ்களை மறுசரிபார்ப்பு செய்யுமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அண்மையில் நடந்து முடிந்த சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது (எஸ்ஐஆர்), மாநிலத்தில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட சாதி சான்றிதழ்களையும் ஆய்வு செய்து, விதிகளின்படி அவற்றை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதில் ஏதேனும் அலட்சியம் காட்டப்பட்டால், சான்றிதழ் வழங்கிய அதிகாரிகளே அதற்கு முழு பொறுப்பேற்க நேரிடும் என்றும் அந்த உத்தரவில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tags : West ,SIR ,Kolkata ,Ebers ,Western ,West Bengal ,
× RELATED பொதுமக்களை நிற்க வைக்க கூடாது;...