×

7 லட்சம் கொய் மலர்களால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், மகாபலிபுரம் அலங்காரம்: ஊட்டி மலர் கண்காட்சிக்கு அலங்கார பணிகள் துவக்கம்

 

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நாளை மறு நாள் துவங்கும் நிலையில், 7 லட்சம் கொய் மலர்களால் சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் மகாபலிபுரம் அலங்காரம் வடிவமைத்து வைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நாளை மறு நாள் 18ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை 10 நாட்கள் 128வது மலர் கண்காட்சி நடக்கிறது. மலர் காட்சியை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகைகளை கொண்ட 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

இன்கா மேரி கோல்டு, பிரஞ்ச் மேரி கோல்டு, பிளாக்ஸ், பெட்டூனியா, பேன்சி, டயான்தஸ், பிகோனியா, டேலியா, பால்சம், ரெனன்குலஸ், வயோலா, அஜிரேட்டம், கேலண்டுலா, கிளாடியோலஸ், லில்லியம், சூரியகாந்தி, சப்னேரியா போன்றவை பூங்காவில் பல்வேறு பகுதிகளில் மலர் பாத்திகளில் நடவு செய்யப்பட்டு பொலிவுடன் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. 35 ஆயிரம் தொட்டிகள் மலர் காட்சி மாடத்தில் பார்வையாளர்களை கவரும் வகையில் அலங்கரித்து வைக்கப்படவுள்ளது.

மேலும் பல வண்ணங்களை கொண்ட ஏழு லட்சம் கொய் மலர்களை கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், மகாபலிபுரம், செஞ்சிக்கோட்டை, திருவள்ளுவர் சிலை, செல்பி ஸ்பாட் உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் வடிவமைத்து காட்சிப்படுத்தப்படவுள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இதற்கான பெங்களூர், ஒசூர் போன்ற பகுதிகளில் இருந்து கார்னேசன் உள்ளிட்ட கொய் மலர்கள் கொண்டு வரப்படவுள்ளன. பல ஆயிரம் கொய் மலர்களை கொண்டு 10 அலங்கார வளைவுகள் உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. இது தவிர மலர்களை கொண்டு பல்வேறு ரங்கோலி அமைக்கப்படுகிறது.

சிறிய தொட்டியில் வளர்த்த செடிகளில் பூத்து குலுங்கும் மலர்களால் கோபுரங்கள் ஆகியவை அமைக்கப்படவுள்ளது. மேலும், தோட்டக்கலைத்துறை மற்றும் பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் பல்வேறு அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது. மலர்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முக்கிய கண்காட்சி பொருட்கள் கொண்டு வரப்பட்டு காட்சியில் வைக்கப்பட்டு வருகின்றன. 10 நாட்களும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

இதை தவிர 15 தனியார் மற்றும் அரசுத்துறை அரங்குகள் போட்டியாளர் அரங்கும் அமைக்கப்படும். இந்த ஆண்டின் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பூங்காக்களை அமைத்து போட்டிக்காக பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டு சிறந்த பூங்காவிற்கான சுழற்கோப்பை வழங்கப்படவுள்ளது. ஆண்டுதோறும் முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் கொண்டு விழா துவக்கப்படும்.

ஆனால் இம்முறை புதிய அரசாங்கம் அமைந்ததால் அதிகாரிகள் அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளதால் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது. இதனால் முதல்முறையாக அழைப்பிதழ் கூட அச்சிடாமல் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.

Tags : Chennai Central Railway Station ,Mahabalipuram ,STATE BOTANICAL PARK ,Ooty ,Central Railway Station ,Ooty Government Botany ,
× RELATED கொடைக்கானல் பேத்துப்பாறை கிராமத்தில்...