பிரதமரின் வேண்டுகோளை ஏற்று பாதுகாப்பு வாகன எண்ணிக்கை 4 ஆக குறைத்து ஆளுநர் அதிரடி

 

சென்னை: மேற்காசிய போர் சூழலால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, பொதுமக்கள் அனைவரும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு பயன்பாட்டை குறைத்து சிக்கனமாக செயல்படுமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். இதனை கருத்தில் கொண்டு பல மாநிலங்களில் ஆளுநர்கள் மற்றும் முதல்வர்கள், வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றனர். இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை அதிரடியாக குறைத்து தமிழ்நாடு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

ஆளுநர், தனது அலுவல் ரீதியான பணிகள், அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக செல்லும் பயணங்களின்போது, பாதுகாப்பு நெறிமுறைகளின்படி இதுவரை 10 காவல்துறை பாதுகாப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், ஆளுநரின் ஆலோசனையின்படி, இனி அவரது பயணங்களின்போது பயன்படுத்தப்படும் காவல்துறை பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 10-லிருந்து 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

உயர் பதவியில் இருப்பவர்கள் தங்களின் பாதுகாப்பு ஆடம்பரங்களை குறைத்துக்கொண்டு, சுற்றுச்சூழல் மற்றும் நாட்டின் பொருளாதார சிக்கனத்திற்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: