*சாலையில் பயணிகளை ஏற்றிச்செல்லும் அவலம்
நாமக்கல் : நாமக்கல்லில், பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாமல் பஸ்களை ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாமக்கல் மாநகராட்சி முதலைப்பட்டியில் புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து திருச்சி, துறையூர், மோகனூர், சேந்தமங்கலம் போன்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள், கடந்த ஓராண்டுக்கு மேலாக பழைய பஸ் ஸ்டாண்டுக்குள் செல்வதில்லை. அதற்கு பதில் பழைய பஸ் ஸ்டாண்ட் முன் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கிறது.
இதற்காக பழைய பஸ் ஸ்டாண்ட் முன் தற்காலிக பஸ் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது. அங்கு, பயணிகள் அமர்ந்து செல்லவும், நிற்கவும் போதுமான வசதிகள் இல்லை. இதனால், வெயில்- மழையில் பொதுமக்கள் நடுரோட்டில் காத்திருந்து பஸ் பிடித்துச் செல்லும் நிலை உள்ளது. அனைத்து பஸ்களும் பழைய பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து செல்ல வேண்டும் என வணிகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.
வெப்ப அலையில் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அறிக்கை மட்டும் வெளியிட்ட மாவட்ட நிர்வாகம், பழைய பஸ் ஸ்டாண்ட் முன் கடும் வெயிலில் கடந்த 3 மாதமாக மக்கள் நின்று சிரமப்படுவதை பற்றி கொஞ்சமும் சிந்திக்கவில்லை. மேலும், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதியான தண்ணீர்தொட்டி கூட மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி கொடுக்கவில்லை.
இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் இருக்கும் புறக்காவல் நிலையம் எப்போதும் பூட்டியே கிடப்பதால், இரவில் நடுரோட்டில் பஸ்சிற்கு காத்திருக்கும் பயணிகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாத சூழல் நிலவி வருகிறது. புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பட தொடங்கியது முதல் பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வராததால், அங்கிருந்த பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன.
இருக்கிற ஒரு சில கடைகளுக்கும் போதுமான வியாபாரம் இல்லாததால், கடை உரிமையாளர்கள் தங்களது பணியாளர்களை குறைத்துக் கொண்டனர். கோடைகாலம் முடிந்து மழைக்காலம் துவங்கும் நிலை உள்ளதால், விரைவாக நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வந்து செல்ல, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருச்சியில் இருந்து நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரும் அனைத்து பஸ்களும் பகல், இரவு நேரங்களிலும் பயணிகள் விடுதி அருகில் நின்று பொதுமக்களை ஏற்றி, இறக்கி செல்கிறது. இங்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட தற்காலிக நிழற்கூடத்தில் 5 பேர் கூட அமர முடியாத அவலநிலை உள்ளது.கடந்த பொங்கல் பண்டிகையின்போது, மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி, துறையூர் செல்லும் அனைத்து பஸ்களும் பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் நின்று செல்ல வேண்டும் என அறிக்கை வெளியிட்டார். இதனை போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. வழக்கம்போல அனைத்து பஸ்களும் சாலையில் நின்று தான் பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன.
இந்த பிரச்னையில் கலெக்டரும் அறிக்கை வெளியிட்டதுடன் முடித்துக் கொண்டார். இதனால், மக்கள் பிரச்னை நீடித்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில், நாமக்கல் எம்எல்ஏ திலீப், மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் ஆகியோர் நேற்று காலை திடீரென நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டில் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கிருந்த கடைக்காரர்கள், பொதுமக்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர். இதுதொடர்பாக கலெக்டரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ தெரிவித்தார்.
