×

இன்ப சுற்றுலா வந்த இடத்தில் சோகம் கோதையாற்றில் மூழ்கி மாணவன் பலி

குலசேகரம் : குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் கோதையாறு மலையோர பகுதிகள் மற்றும் மரங்கள் அடர்ந்த சோலைவனங்கள் நிறைந்த பகுதி வழியாக பாய்ந்து செல்லுகிறது.இதில் பல இடங்கள் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வந்து நேரம் செலவிடும் பகுதியாக உள்ளது. அந்த வகையில் திற்பரப்பு கூடல்கடவில் கோதையாறுடன் நந்தியாறு கலக்கும் பகுதி அனைவரையும் கவரும் ரம்மியமான பகுதி.

இந்த பகுதியில் இயற்கை சூழலை அனுபவிக்க வரும் பயணிகளை கவரும் வகையில் தனியார் ரிசார்ட் ஒன்று செயல்படுகிறது. இதில் விடுமுறையை கழிக்க பல இடங்களில் இருந்தும் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களை கவரும் வகையில் ரிசார்ட் நிர்வாகம் பல வகையான அமைப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இங்கு வருகிறவர்கள் கோதையாற்றில் இறங்கி குளிக்க செல்லும் வகையில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதி முழுவதும் கோதையாற்றில் கரடு முரடான பாறைகள் நிறைந்து உள்ளது. அதிக ஆழம் கொண்ட பகுதியாகவும் உள்ளது. ஆபத்தான இந்த பகுதியில் பழக்கம் இல்லாதவர்கள் குளிக்கும் போது ஆபத்தில் சிக்கி கொள்ளும் நிலை உள்ளது. ரிசார்ட் நிர்வாகம் தங்களின் லாபம் கருதி பயணிகள் இங்கு செல்வதை கண்டு கொள்வதில்லை. இது சம்பந்தமான புகார்கள் வந்தாலும் பல முக்கியஸ்தர்கள் தொடர்பில் இருப்பதால் யாரும் கண்டு கொள்வதில்லை.

இந்த நிலையில் நேற்று நாகர்கோவிலில் உள்ள சர்ச் ஒன்றில் இருந்து சுமார் 50 க்கு மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் மத போதகர்கள் சபை விசுவாசிகள் இந்த பகுதிக்கு வந்துள்ளனர். அவர்கள் இந்த ரிசார்ட்டில் இயற்கை சூழலில் சந்தோஷமாக ஆடி பாடி மகிழ்ந்தனர். பின்னர் மாலை நேரத்தில் கும்பல் கும்பலாக கரடு முரடான பாறைகள் நிறைந்த கோதையாற்றில் குளித்துள்ளனர்.

இவ்வாறு குளிக்கும் போது இந்த குழுவில் வந்த வழுக்கம்பாறை பகுதியை சேர்ந்த ஜாண்ராஜ் என்பவர் மகன் சேம்ராஜ் (16) என்பவரை காணவில்லை. அங்கும் இங்கும் தேடியும் காணாததால் அவர்களிடையே பதற்றம் தொற்றிக் கொண்டது. உடனடியாக குலசேகரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

சம்பவம் நடைபெற்ற போது ரிசார்டில் இருந்த தக்கலை டிஎஸ்பி பார்த்திபன் உடனடியாக அங்கு சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டார். தீயணைப்பு துறை வீரர்கள் சிறிது நேர தேடுதலில் சேம்ராஜ் பாறைகளுக்கு இடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். உடலை குலசேகரம் போலீசார் ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இன்ப சுற்றுலா வந்த இடத்தில் தண்ணீரில் மூழ்கி இறந்த மாணவன் உடலை பார்த்து உடன் வந்தவர்கள் அழுது புரண்டது அனைவரின் கண்களையும் குளமாக்கியது.

தங்கை கண் முன் நடந்த சம்பவம்

தண்ணீரில் மூழ்கி இறந்து சேம்ராஜ் மும்பையில் உள்ள தனியார் பள்ளியில் +1 படித்து வந்துள்ளார். விடுமுறைக்கு சொந்த ஊர் வந்தவர் நாகர்கோவிலில் உள்ள சர்ச் ஒன்றில் நடைபெற்ற விடுமுறை வேதாகம பள்ளி வகுப்பில் தனது தங்கையுடன் கலந்து கொண்டார். அங்கிருந்து நேற்று சுற்றுலா வந்த குழுவில் தனது தங்கையுடன் வந்துள்ளார்.

2 வது பலி

கடந்த டிசம்பர் மாதம் சென்னை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் ஒருவர் குடும்பத்துடன் இந்த ரிசார்ட்டில் புத்தாண்டு கொண்டாட வந்தவர் இந்த ஆற்றில் பாறையில் அமர்ந்து அழகை ரசித்து கொண்டிருக்கும் போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு தண்ணீரில் விழுந்து இறந்தார். தற்போது இரண்டாவது சம்பவமாக மானவன் பலியாகியுள்ளான்.

Tags : Gothaiyatar ,West Continuation Hill ,Kumari district ,Gotaiyaru ,
× RELATED வேலூர்- ஆற்காடு சாலையில் கார்களை...