பெரம்பலூர், மே 16: சென்னை ஆயுதப்படை அலுவலகத்தில் இளநிலை உதவியாளரை பெண் டிஐஜி தாக்கியதைக் கண்டித்து பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி புரிந்தனர். சென்னையில் தமிழ்நாடு காவல்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் விக்னேஷ் என்பவரை, பெண் டிஐஜி தாக்கிய சம்பவத்தைக் கண்டித்தும், இளநிலை உதவியாளரை தாக்கிய டிஐஜி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழ்நாடு காவல்துறை அமைச்சு பணியாளர் சங்கம் சார்பாக கருப்பு பேட்ஜ் அணிந்து பணி புரிந்தனர்.
அதன்படி, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று (15ம் தேதி) காலை 10 மணி முதல் தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர் சங்கம் சார்பாக அந்த சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் நெப்போலியன் தலைமையில் 10 பெண்கள் உள்பட 30 அமைச்சுப் பணியாளர்கள்கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர்.
