டெல்லி: அடுத்தாண்டு முதல் நீட் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த 3ம் தேதி நடத்தப்பட்ட நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதைதொடர்ந்து இன்று இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்தார்.
அப்போது; நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்கிறோம்; பல குறைபாடுகளை சரி செய்ய வேண்டியுள்ளது. தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையில் சீர்திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. நீட் முறைகேடு நடைபெற்றதாக தெரியவந்தவுடன் தேர்வை ரத்து செய்வதே சிறந்தது என முடிவு செய்தோம். நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் சிபிஐ முழுமையான விசாரணை நடத்தும். தவறு செய்தது தேர்வு முகமை அதிகாரிகளாக இருந்தாலும் தப்ப முடியாது. இம்முறை எந்த முறைகேட்டையும் அனுமதிக்க மாட்டோம்.
நீட் மறுத்தேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை. நீட் மறுதேர்வை மாணவர்கள் கட்டணமின்றி எழுதலாம். நீட் தேர்வு கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும். விரும்பினால் தேர்வு எழுதும் நகரங்களை மாற்ற ஒரு வாரம் அவகாசம் தரப்படும். மறுத்தேர்வுக்கான புதிய ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும். நீட் தேர்வுக்கான அனுமதி அட்டை ஜூன் 14ம் தேதிக்குள் வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல் பிரத்யேக மையங்கள் மூலமாக ஆன்லைன் வழியாக நீட் தேர்வு நடத்தப்படும்.
முறைகேட்டை தடுக்கும் வகையில் இனி நீட் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும். ஓஎம்ஆர் தேர்வுத்தாள் முறையைவிட கணினி வழித் தேர்வு முறை ஒப்பீட்டளவில் சிறந்தது என்று கூறினார்.
