திருவள்ளூர் – காக்களூர் பைபாஸ் சிக்னலில் சாலை விபத்துகளை தவிர்க்க ரவுண்டானா அமைக்கப்படுமா?.. வாகன ஓட்டிகள் எதிர்ப்பார்ப்பு

 

திருவள்ளூர்: மூன்று சாலைகள் சந்திக்கும் திருவள்ளூர் – காக்களூர் பைபாஸ் சிக்னலில் போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துகளை தவிர்க்க ரவுண்டானா அமைக்கப்பட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். திருவள்ளூர் மாவட்ட தலைநகரில் இருந்து சென்னை, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் திருவள்ளூர் ரயில் நிலையம் ஆகிய பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. மேலும், காக்களூர் பைபாஸ் சாலை வழியாக செவ்வாபேட்டை, வேப்பம்பட்டு, திருநின்றவூர், ஆவடி, தண்ணீர்குளம், பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கும் வாகனங்கள் சென்று வருகின்றன.

அதேபோல் திருத்தணி, திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் திருவள்ளூர் ஜெஎன் சாலை வழியாக சென்று வருகின்றன. ஜெஎன் சாலை மற்றும் காக்களூர் பைபாஸ் சாலை சந்திப்பு குறுகலாக இருப்பதால். ஆவடியில் இருந்து வரும் வாகனங்களும் ஜெஎன் சாலையில் இருந்து இச்சாலை வழியாக பிரிந்து செல்லும் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலால் சிக்கித் தவித்து வருகின்றன. சமீபத்தில் இச்சாலையை அகலப்படுத்துவதற்காக இடையூறாக இருந்த மின்மாற்றி மற்றும் கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டு வளைவு பகுதி அகலப்படுத்தப்பட்டது. இதனிடையே, ஜெஎன் சாலை மற்றும் காக்களூர் பைபாஸ் சாலை பிரிந்து செல்லும் சந்திப்பில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளையும், பணியில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து காவலர்களை மதிக்காமல் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு கடும் நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.

மேலும், ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்கள் விதிகளை மீறி தாறுமாறாக ஓட்டிச் செல்வதால் இதனை கட்டுப்படுத்த முடியாமல் போக்குவரத்து காவலர்களும் திணறி வருகின்றனர். இதனால், இப்பகுதியில் பிற வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, காக்களூர் பைபாஸ் சாலை மற்றும் ஜெஎன் சாலை சந்திக்கும் இடத்தில் சிறிய அளவிலான ரவுண்டானா அமைக்க வேண்டும். அவ்வாறு சிறிய ரவுண்டானா அமைத்தால் வாகனங்கள் முறையாக சொல்ல வசதியாக இருக்கும் என்றும், போக்குவரத்து நெரிசலும் குறையும் எனவும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: