மாமல்லபுரம் அருகே சிவகாமி நகரில் புதர் மண்டி கிடக்கும் சிறுவர் பூங்கா: சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

 

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே சிவகாமி நகரில் புதர் மண்டி கிடக்கும் சிறுவர் பூங்காவை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். மாமல்லபுரம் நகராட்சிக்குட்பட்ட பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையையொட்டிள்ள சிவகாமி நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மேலும், சிவகாமி நகரில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறுவர் பூங்கா அமைத்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மாமல்லபுரம் (பேரூராட்சி) நகராட்சி நிர்வாகம் மூலம் குடியிருப்பு பகுதியையொட்டி சிறுவர்கள் விளையாடி மகிழ்வதற்காக, சிறுவர் பூங்கா அமைக்க முடிவு செய்து, தனியாக இடம் தேர்வு செய்து அந்த இடத்தை சுற்றி மதில் சுவர் அமைக்கப்பட்டது.

ஆனால், 6 ஆண்டுகளை கடந்தும் சிறுவர் பூங்கா அமைக்க எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளாததால், அங்கு செடி – கொடிகள், முளைத்து காடுபோல் காட்சியளிக்கிறது. அடர்ந்த செடிகளில் இருந்து பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் அதிகரித்து குடியிருப்பு பகுதிக்கு அருகே உலா வருவதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே, மாமல்லபுரம் நகராட்சி அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு சிறுவர்கள் விளையாடி மகிழும் வகையில், அங்குள்ள செடி, கொடிகளை அகற்றி சிறுவர் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: