சென்னை: தமிழகத்தில் கடந்த திமுக அரசால் வழங்கப்பட்டு வந்த 1.31 கோடி பேருக்கு இன்று கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000 வராது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, விரைவில் இந்த தொகை வழங்கப்படும் என்று கைவிரித்ததால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து தவெக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்த திட்டங்களை தவெக அரசு தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. குறிப்பாக திமுக ஆட்சியில் 2023 செப்டம்பர் 15ம்தேதி தொடங்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்ப்பை பெற்ற திட்டமாகும்.
ஏனென்றால் பெண்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக இந்த தொகை வரவு வைக்கப்படுவதால் குடும்ப செலவுகளுக்கு அடுத்தவர்களை நாட வேண்டிய அவசியம் இல்லை என்பதால் பெண்கள் இந்த திட்டத்தால் பெரிய அளவில் பயன் பெற்று வருகின்றனர். மேலும், குடும்ப செலவுகள், குழந்தைகள் கல்வி, மருத்துவத் தேவைகள் உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கு இந்த தொகை பெரும் உதவியாக இருந்ததாக பல பெண்கள் கூறி வந்தனர். மகளிர் உரிமை தொகை குறிப்பாக கிராமப்புற மற்றும் நடுத்தர குடும்ப பெண்களுக்கு இந்த திட்டம் முக்கிய ஆதரவாக இருந்தது.
இந்த திட்டத்தின் மூலம் திமுக ஆட்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தை தற்போது பல்வேறு மாநிலங்களும் பின்பற்ற தொடங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தமிழக அரசின் மிக முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றாக கருதப்பட்டது. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் இந்த திட்டத்தின் மூலம் தற்போது 1.31 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15ம்தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக இந்த தொகை வரவு வைக்கப்பட்டு வந்தது.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெறுவதையொட்டி கடந்த பிப்ரவரி மாதத்திலேயே திமுக அரசு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என 3 மாதங்களுக்கு சேர்த்து ரூ.3000 மற்றும் கோடை தொகை ரூ.2000 என மொத்தம் ரூ.5000 தொகையை பிப்ரவரி மாதமே அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைத்து விட்டனர். மேலும், திமுக ஆட்சிக்கு வந்தால் மே மாதம் முதல் ரூ.2000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், மே மாத உரிமைத் தொகை குறித்து பலத்த சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும், திமுக அரசு கொண்டு வந்த திட்டம் என்பதால் தவெக அரசு தொடருமா அல்லது தடை போடுமா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கிடையே, முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய், சட்டமன்ற பேரவையில், நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தில் பேசியபோது, ‘முந்தைய அரசுகளால் கொண்டு வரப்பட்ட முக்கிய மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்’ என்ற உறுதிமொழியை அளித்திருந்தார்.இதனால் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடர வேண்டும் என்றும் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனாலும், திமுக அரசின் அமைச்சரவை பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய அரசு இன்னும் முழுமையாக பொறுப்பேற்காத சூழல் நிலவுகிறது. இதனால் அரசுத் துறைகளில் நிதி ஒதுக்கீடு மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறைகள் தற்காலிகமாக மந்தமாகியுள்ளது. பொதுவாக அரசின் நிதி ஒதுக்கீடுகள் அமைச்சரவை ஒப்புதல் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதிகளுடன் தான் நடைமுறைக்கு வரும். தற்போது இடைக்கால நிர்வாக சூழல் நிலவுவதால், மகளிர் உரிமைத் தொகைக்கான நிதி விடுவிக்கப்படுமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று 15ம்தேதி என்பதால் அதை நம்பி இருக்கக்கூடிய பெண்கள் இந்த மாதம் பணம் வருமா என்ற பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தின் போது பெண்களுக்கான உரிமைத் தொகை ரூ.1,000ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்று முக்கிய வாக்குறுதி அளித்திருந்தார். எனவே ரூ.2500 எப்போது வரவு வைக்கப் போறீங்க., திட்டம் தொடருமா என பெண்கள் அடுக்கடுக்கான கேள்விகளை விஜய் அரசுக்கு எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் விஜய் தலைமையில் நிதிநிலை குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதை தொடர்ந்து முக்கிய அறிவிப்பு ஒன்றை முதல்வர் விஜய் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் முதல்வர் விஜய் கூறியிருப்பதாவது: பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது. மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தவெக அரசின் இந்த திடீர் உத்தரவால் இந்த மாதம் கலைஞர் மகளிர் உரிமை தொகை கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசியல் மாற்றங்கள் எதுவாக இருந்தாலும், மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதே பெண்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. குறிப்பாக மாதந்தோறும் இந்த தொகையை நம்பி வாழும் குடும்பங்கள் அதிகமாக இருப்பதால், புதிய அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் பேரவையில் திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அடுத்த நாளே இந்த திட்டத்தை தமிழக அரசு நிறுத்துவதாகவும் மறு சீரமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதனால் மகளிர் உதவித்தொகை எப்போது வழங்கப்படும் என தமிழக அரசு அறிக்கவில்லை. இதனால் பெண்கள் குறிப்பாக வயதானவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாவார்கள் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
* எதிர்க்கட்சி தலைவரின் கேள்வியால் மாணவர்களுக்கு ரூ.1000 கிரெடிட்
தமிழகத்தில் இயங்கும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் தமிழ் வழியில் படித்து முடித்து உயர்கல்விக்காக கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் காரணமாக அந்த தொகை வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மாணவர்களின் வங்கிக் கணக்கில்நேரடியாக சேர்க்கப்படும் இந்த தொகை வராததால் இளநிலை, பாலிடெக்னிக், ஐடிஐ போன்ற படிப்புகளில் தொடரும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் குறித்து சட்டப் பேரைவையில் நேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாணவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 நிதியின் மூலம் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயன்பெற்று வருகின்றனர்.
இதற்காக முந்தைய அரசு ரூ.380 கோடி நிதியும் ஒதுக்கியுள்ளது. திடீரென அந்த தொகை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து, நிறுத்தி வைக்கப்பட்ட தொகை ரூ.1000ஐ மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேற்று செலுத்தப்பட்டது.
