திருப்பூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் உத்தரவு

சென்னை: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

“திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கரூர்-கோயம்புத்தூர் தேசிய நெஞ்சாலையில், குறுக்கத்தி செக்போஸ்ட் அருகில், வேகமாக வந்த லாரி சாலைத் தடுப்பில் மோதிய நிலையில் அதைச் சரிசெய்து கொண்டிருந்த, கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ரா.செந்தில் (வயது 48) த/பெ.ராஜாமணி மீது அவ்வழியே வேகமாக வந்த Xylo நான்கு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், அவரும், Xylo வாகன ஓட்டுநர் ர.ராம் (வயது 22), த/பெ.ரத்தினம், மயிலாடுதுறையைச் சேர்ந்த நரசிம்மன் (வயது 65), அவரது மனைவி சாந்தாலட்சுமி (வயது 60) மற்றும் அவரது மகன் ந.பாலாஜி (வயது 29) ஆகிய ஐந்து நபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையுமடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களையும் இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

Related Stories: