சென்னை: 500 யூனிட்டுகளுக்குள் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்ற உத்தரவில் முதல்வர் ஜோசப் விஜய் கையெழுத்திட்டுள்ளார். மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என வாக்குறுதி அளித்திருந்த நிலையில், 2 மாதத்துக்கும் சேர்த்து 200 யூனிட் மட்டுமே இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது ஏமாற்றம் தருவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் குடியிருப்புகள், வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து வகை மின் நுகர்வோர்களின் மின் இணைப்பு 3.32 கோடி. அதில் பெரும்பாலானவை குடியிருப்புகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள். தமிழகத்தில் தற்போது தனிநபர் சராசரி மின் பயன்பாடு ஆண்டுக்கு 1,800 யூனிட்களாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றனர்.
மாநிலம் முழுவதும் தற்போது அனைத்து வகையான குடியிருப்புகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. அதேநேரம் தேர்தல் நேரத்தில் தவெக தலைவர் ஜோசப் விஜய் ‘தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்’ என அறிவித்திருந்தார். இதனால் பொதுமக்களுக்கு மின்சார கட்டணம் தற்போது உள்ள கட்டணத்தை விட பாதியாக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையே தவெக தலைவர் ஜோசப் விஜய், ேநரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று முதல்வராகப் பதவியேற்றார். அப்போது 3 முக்கிய அரசாணை கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முதலாவதாக, 2 மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் இலவசம் மின்சாரம் என போட்டுள்ளார். இது விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளது. மாதம் 200 யூனிட் இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து விட்டு, 2 மாதங்களுக்கும் சேர்த்து 200 யூனிட் மட்டுமே இலவசம் என கூறியுள்ளது ஏமாற்றம் அளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
