காதல் வலையில் வீழ்த்தி பெற்றோருக்கு மிரட்டல்: ஐதராபாத்தில் 25 சிறுமிகளை ஆபாச வீடியோ எடுத்து ரூ.45 லட்சம் பறிப்பு: தாய், மகன் உட்பட 11 பேர் போக்சோவில் கைது

 

திருமலை: ஐதராபாத்தில் 25 சிறுமிகளை காதல் வலையில் வீழ்த்தி ஆபாச வீடியோக்கள் எடுத்து பெற்றோரை மிரட்டி பணம் பறித்த தாய், மகன் உட்பட 11 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் ஒரு தொழிலதிபரின் மகளான 16 வயது சிறுமியை, குக்கட்பள்ளியை சேர்ந்த கோடுரி சந்திரசேகர் ஆசாத் என்ற அர்ஜூன்(28) சமூக வலைதளங்கள் மூலம் பழகி காதல் வலையில் விழ வைத்துள்ளார்.

பின்னர் அவருடன் நெருங்கி பழகிய போட்டோக்கள் மற்றும் ஆபாசமான வீடியோவை எடுத்து, தொழிலதிபருக்கு அனுப்பி மிரட்டி பணம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலதிபர் இனி எனது மகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என கெஞ்சியுள்ளார். ஆனால் அர்ஜூனின் தாய் மீனா குமாரி தொழிலதிபரை தொடர்பு கொண்டு ‘என் மகன் உங்கள் மகளின் வாழ்க்கையில் வர வேண்டாம் என்றால், அவனுக்கு ரூ.25 லட்சம் கொடுங்கள்’ என்று மிரட்ட தொடங்கினார். அதேபோல் மீனா குமாரியின் சகோதரர் பிரஷாந்தும், சிறுமியின் தந்தையை பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டி உள்ளார். தொடர்ந்து மேலும் சிலர் தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதனால் சிறுமியின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அர்ஜூன், அவரது தாய் மீனா குமாரி, தம்பி ராஜீவ், மாமா தாரகா பிரசாந்த், மீனா குமாரியின் நண்பர் வினில் சவுத்ரி மற்றும் சில நண்பர்கள் என மொத்தம் 11 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் நர்சிங்கை சேர்ந்த ஒரு இளம்பெண் சமீபத்தில் ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலையத்தில் அர்ஜூன் மீது புகார் அளித்துள்ளார். அவர் காதல் என்ற பெயரில் தன்னை ஏமாற்றியதாகவும், அடிக்கடி உடலுறவு வைத்துக்கொண்டு பெரும் தொகையையும் வசூலித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியபோது அதிர்ச்சியான தகவல்கள் வெளியானது.

அர்ஜூன் மொத்தம் 25 சிறுமிகளை காதல் வலையில் வீழ்த்தி, பெற்றோரை மிரட்டி ரூ.45 லட்சம் வரை பறித்துள்ளது தெரியவந்தது.  தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் யாருடன் பழகுகிறார்கள் என கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலம் பாதிக்கப்படும். ஏதாவது பிரச்னையில் சிக்கிக்கொண்டால், தயங்காமல் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Related Stories: