கைதானவர்களை விடுவிக்கக் கோரி போலீஸ் ஸ்டேஷனை கிராம மக்கள் முற்றுகை

நல்லம்பள்ளி, மே 7: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே நாகர்கூடல் கிராமத்தில், கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் நிர்வாகத்தை, தனி நபர் ஒருவர் மேற்கொண்டு வந்துள்ளார். கோயில் நிர்வாக கணக்குகளில் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததால், அவரை மாற்றி புதிய தலைவரை அண்மையில் கிராம மக்கள் தேர்வு செய்தனர். ஆனால், புதியதாக நியமிக்கப்பட்டவரிடம், பொறுப்புகளை ஒப்படைக்காமல் ஏற்கனவே இருந்த நபரே நிர்வாக பணியை மேற்கொண்டு வந்துள்ளார். இதனிடையே, சித்ரா பவுர்ணமி அன்று சிறப்பு பூஜை நடத்தி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அவர் ஏற்பாடு செய்தார். இதனை ஏற்க மறுத்த புதிய நிர்வாகி தலைமையிலான பொறுப்பாளர்கள், புதிய தலைமையின் கீழ் தான் கோயில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கூறினர்.

அப்போது, இருதரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பைச் சேர்ந்த 15 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து இருதரப்பைச் சேர்ந்த 15 பேர் மீது இண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நேற்று முன்தினம், இரு தரப்பிலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். நேற்று கைது செய்யப்பட்ட நபரை விடுவிக்கக் கோரி, ஒரு தரப்பினர் இண்டூர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆர்ப்பாட்டம் நடந்தது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, புகாரின் அடிப்படையில், இரு தரப்பிலும் ஒவ்வொரு நபரை கைது செய்துள்ளோம். தலைமறைவான 13 பேரை விரைவில் கைது செய்வோம். தேவையின்றி ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது என எச்சரிக்கை செய்தனர். இதன் பின்னர், முற்றுகை போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.

Related Stories: