வர்த்தக காஸ் சிலிண்டர் விலை உயர்வு எதிரொலி கேரளத்தில் ஓட்டல், பேக்கரிகள் மூடல்

 

திருவனந்தபுரம்: வர்த்தக காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் நேற்று ஓட்டல், பேக்கரி உரிமையாளர்கள் 24 மணிநேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலான ஓட்டல்கள், பேக்கரிகள் மூடப்பட்டிருந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். வர்த்தக காஸ் சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு சமீபத்தில் கடுமையாக உயர்த்தியது. ஒரு சிலிண்டருக்கு ரூ.993 உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக கேரளத்தில் ஒரு வர்த்தக சிலிண்டரின் விலை ரூ. 3085 ஆக உள்ளது. இந்த கடும் விலை உயர்வு ஓட்டல்கள், காஸ் சிலிண்டரை பயன்படுத்தும் பல்வேறு நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. ஈரான் போர் காரணமாக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் கேரளத்தில் ஏற்கனவே பல ஓட்டல்கள் மற்றும் நிறுவனங்கள் மூடப்பட்டன.

இந்தநிலையில் சிலிண்டர் விலை கடுமையாக உயர்த்தப்பட்டதை கண்டித்து கேரளாவில் நேற்று (6ம் தேதி) 24 மணிநேர வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஓட்டல், பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று மாநிலம் முழுவதும் ஓட்டல்கள், பேக்கரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் ஓட்டல்களும் பேக்கரிகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் ஓட்டல்களை நம்பியுள்ள அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் உள்பட பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். வயநாடு, மூணாறு உள்பட சுற்றுலாத்தலங்களிலும் ஓட்டல்கள் மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகளும் அவதியடைந்தனர்.

 

Related Stories: