×

பீனிக்ஸ் பறவை போல அதிமுக வெற்றிப் பாதைக்கு திரும்பும்: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை

சென்னை: தமிழ்நாட்டு மக்கள் வழங்கிய தீர்ப்பை மனப்பூர்வமாக ஏற்கிறேன் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். மக்கள் தான் இங்கு நீதிபதிகள். மக்களுக்காகத் தான் ஆட்சி. எனவே, மக்கள் வழங்கிய முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். புரட்சித் தலைவியின் வழியில், இந்தப் பின்னடைவில் இருந்து விரைவில் மீண்டு வருவோம். பீனிக்ஸ் பறவை போல அதிமுக வெற்றிப் பாதைக்கு திரும்பும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த, வாக்காளப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி ! தமிழக சட்டமன்றத் தேர்தலில் எழுச்சியுடன் முன்வந்து ஜனநாயகக் கடமையாற்றிய அனைத்து மக்களுக்கும் எனது வணக்கத்தையும், நன்றியையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் தான் இங்கு நீதிபதிகள். மக்களுக்காகத் தான் ஆட்சி. எனவே, மக்கள் வழங்கிய முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். புரட்சித் தலைவியின் வழியில், இந்தப் பின்னடைவில் இருந்து விரைவில் மீண்டு வருவோம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு பிரச்சாரம் செய்த பாரதப் பிரதமர்  நரேந்திர மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷா-வுக்கும், ஒன்றியஅமைச்சர்களான பியூஷ் கோயல், ஜே.பி. நட்டா, பா.ஜ.க. தேசியத் தலைவர் நிதின் நபின் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

நம் கூட்டணியின் வெற்றிக்கு அயராது உழைத்த, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான, தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன்-க்கும், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்-க்கும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்-க்கும், அக்கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட தொண்டர்களுக்கும்; தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன்-க்கும், புதிய நீதிக் கட்சித் தலைவர் டாக்டர் A.C. சண்முகம்-க்கும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் டாக்டர் T.R. பாரிவேந்தர்-க்கும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் P. ஜான் பாண்டியன்-க்கும், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை டாக்டர் M. ஜெகன்மூர்த்தி-க்கும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதோடு, நமக்கு நிபந்தனையின்றி பேராதரவு அளித்த கட்சிகள், அமைப்புகள் மற்றும் சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோருக்கும் நன்றி. Last but not least என்பதுபோல, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு அயராது உழைத்திட்ட தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகச் செயலாளர்கள், கிளை, வார்டு, வட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த, வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் நல்லாசியுடன் ஃபீனிக்ஸ் பறவை போல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும். “எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று சூளுரைத்த நம் புரட்சித் தலைவி அம்மாவின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் பணியில் என்றென்றும் ஈடுபடும் என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.

Tags : Adimuga ,General Secretary ,Eadapadi Palanisamy ,Chennai ,Edappadi Palanisami ,Tamil Nadu ,
× RELATED திமுகவின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்