×

மஞ்சகம்பை நாகராஜர் கோயில் குண்டம் திருவிழா

*திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஊட்டி : ஊட்டி அருகே மஞ்சகம்பை நாகராஜர் கோயில் குண்டம் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள மஞ்சகம்பை ஹெத்தையம்மன், சத்திய நாகராஜர் கோயில் உள்ளது.

பூலோக சொர்க்கம் என்று போற்றப்படும் இந்த கோயிலை மஞ்சகம்பை கிராமத்தை ஒட்டிய இந்த கோயிலை முன்னர் அந்த கிராம மக்கள் பராமரித்து வந்தனர். தற்போது இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.

மிகவும் சக்தி வாய்ந்த கோயிலாக கருதப்படும் இந்த கோயிலில் நேர்த்திக்கடன் வைப்பவர்களுக்கு திருமண தோஷம், குழந்தை பாக்கியம், வாழ்க்கை முன்னேற்றத்திற்கு சிறந்த கோயிலாக கருதப்படுகிறது. இதனால், இந்த கோயிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர்.

இந்த கோயிலில் ஆண்டுதோறும் மே மாதம் நடக்கும் பூக்குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். நடப்பாண்டு 52ம் ஆண்டு பூக்குண்டம் திருவிழா நேற்று முன்தினம் மாலை வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், அம்மன் ஆவாஹனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.

நேற்று காலை பல்வேறு அபிஷேகங்களுடன் கணபதி அய்யப்பன், மகா சக்தி ஹெத்தையம்மன், சத்திய நாகராஜர் ஆகியோருக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி நேற்று முன்தினம் மாலையே மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மஞ்சக்கம்பையில் குவிந்திருந்தனர். நேற்று பகல் 1 மணி அளவில் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட குண்டத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றபடி ‘ஓம் சக்தி பராசக்தி’ என்ற கோஷங்களை எழுப்பியபடி குண்டம் இறங்கினர். பெண்கள் பலரும் கைக்குழந்தைகளுடன், பலர் அலகு குத்தியபடியும் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

விழாவில், நீலகிரி மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவையொட்டி படுகர் மற்றும் மலைவாழ் மக்களின் நடனம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் மஞ்சூர், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

Tags : Manjakamba Nagarajar Temple Kundam Festival ,Kundam Festival of Manjakamba Nagarajar Temple ,Ooty ,Manjakamba Hettaiamman ,Sathya Nagarajar ,Nilgiri district ,earth… ,
× RELATED கார் விபத்தில் சிக்கியது முதியவர் உயிரிழப்பு