ம.பியில் சொகுசு படகு ஆற்றில் கவிழ்ந்ததில் 9 பேர் பலி தமிழகத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 5 பேர் உயிரிழப்பு

திருவெறும்பூர்: மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் பகுதியில் உள்ள பர்கி அணையில் நேற்று முன்தினம் படகு கவிழ்ந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 9 பேர் பலியாகினர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்தவர் காமராஜ் (38). துப்பாக்கி தொழிற்சாலையில் அப்ரண்டீஸ் பயிற்சி பெற்றுள்ள இவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன் மத்திய பிரதேசத்தில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் பணியில் சேர்ந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் காமராஜ், தனது மனைவி கார்குழலி (38), மகன்கள் தமிழ்வேந்தன் (5), புவிந்திரன் (10), திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மூவானூரை சேர்ந்த காமராஜின் அண்ணன் மனைவி சவுபாக்யா(42), இவரது மகள் இனியா (12), மகன் மயூரன்(8) என 7 பேர் உட்பட மொத்தம் 44 பேர் மத்திய பிரதேசம் ஜபல்பூர் பகுதியில் உள்ள பர்கி அணையில் படகில் சுற்றுலா சவாரி சென்றுள்ளனர்.

அணையின் நடுவே சென்று கொண்டிருந்தபோது பலத்த சூறாவளி வீசியதால் படகு ஆட ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் படகு மூழ்கியது. இதில் திருச்சியில் இருந்து சென்றிருந்த காமராஜ், அவரது மனைவி கார்குழலி, இளைய மகன் தமிழ்வேந்தன் மற்றும் சவுபாக்கியா, அவரது மகள் இனியா உள்ளிட்ட அனைவரும் தண்ணீரில் மூழ்கினர். தகவல் அறிந்ததும் மீட்பு பணிகள் துவங்கியது. இதில் புவிந்திரன், மயூரன் உட்பட 29 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்நிலையில் கார்குழலி மற்றும் இனியா ஆகியோர் உட்பட 9 பேரின் உடல்களை மீட்பு படையினர் மீட்டுள்ளனர். காமராஜ், தமிழ்வேந்தன், சவுபாக்கியா உட்பட மொத்தம் 6 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களது உடல்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காமராஜின் குடும்பத்தினர் விமானத்தில் நேற்று மத்திய பிரதேசம் விரைந்துள்ளனர். இதற்கிடையே துப்பாக்கி தொழிற்சாலையை சேர்ந்த காமராஜின் நண்பர்கள், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் உயிரிழந்தவர்களின் 5 பேரின் உடல்களை விரைந்து மீட்டு திருச்சிக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீரில் மூழ்கி மாயமான காமராஜ் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்களை மீட்பதற்கு திருச்சி எம்பி துரை வைகோ மூலம் நடவடிக்கை எடுப்பதற்கு தொழிற்சங்க நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

* படகு மூழ்க தொடங்கியதும் லைஃப் ஜாக்கெட் விநியோகம்
படகு சவாரி செய்பவர்களுக்கு தரப்படும் உயிர் காக்கும் கவச உடை (லைஃப் ஜாக்கெட்) தரப்படவில்லை. படகு அணையின் நடுவே சென்று கொண்டிருந்தபோது பலத்த சூறாவளி வீசியதால் படகு ஆட ஆரம்பித்தது. அப்போது சிலர் படகை கரைக்கு திருப்பும்படி கூச்சலிட்டனர். ஆனால் அதற்குள் படகு கவிழ தொடங்கியது. அப்போதுதான் பயணிகளுக்கு லைப் ஜாக்கெட் கொடுக்கப்பட்டதாக உயிர் தப்பிய பயணிகள் தெரிவித்தனர்.

Related Stories: