ஈரான் மீதான போர் விவகாரத்தில் 60 நாள் கெடு முடிந்தது; டொனல்ட் டிரம்ப் அரசுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானம் தோல்வி

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் ஈரான் மீது போர் தொடர்ந்தது தொடர்பாக ட்ரம்ப் அரசுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்தது. இதனால் எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது. அமெரிக்க அரசியலமைப்பில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து போர் நடத்தி வருகிறது. அதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போர் சூழல் உலக பொருளாதாரத்தையே உலுக்கி வருகிறது. இப்போது இரு நாடுகளும் நேரடியாக தாக்கிக் கொள்ளவில்லை என்றாலும் அங்குப் பதற்றம் தொடர்கிறது. எப்போது வேண்டும் என்றாலும் மீண்டும் போர் வெடிக்கும் என்ற சூழலே உள்ள நிலையில், திடீரென நாங்கள் போரில் ஈடுபடவில்லை என ட்ரம்ப் நிர்வாகம் ஒரு புதிய விளக்கத்தை அளித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து போர் நடத்தி வருகிறது. அதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போர் கடந்த பிப்ரவரி 28ம் தேதி தொடங்கியது. இந்த போர் தொடங்கிய முதல் நாளிலேயே ஈரான் நாட்டின் உயர்மட்ட தலைவர் அலி காமெனி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். இப்போது, இந்த போர் நிறுத்தம் தற்காலிகமாக அமலில் உள்ளது. அதனால் இரு நாடுகளும் நேரடியாக தாக்கி கொள்ளவில்லை. இருப்பினும், அங்கு முழுமையாக அமைதி திரும்பவில்லை. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாற்றில் காணாத உச்சத்தை நோக்கி நகர்கிறது.

இந்த சூழலில், அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒரு நாட்டின் மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை எடுத்தால் 60 நாட்களுக்குள் அதை முடிக்க வேண்டும். 60 நாட்களை கடந்தால் அந்த போரை தொடர நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை. நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமலேயே ஈரான் போரை டிரம்ப் ஆரம்பித்த நிலையில், இன்றுடன் 60 நாட்களாகி விட்டது. அதனால் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டிய கட்டாயத்தில் டிரம்ப் உள்ளார். ஆனால், ட்ரம்ப் நிர்வாகமோ இதிலிருந்து தப்பிக்க ஒரு புதுமையான வழியை கண்டுபிடித்துள்ளது.

அதாவது, நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற வேண்டிய நெருக்கடியை தவிர்க்க, ட்ரம்ப் நிர்வாகம் ஒரு புதிய வாதத்தை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அவை தலைவர் மைக் ஜான்சன் கூறுகையில், ‘தற்போது குண்டுவீச்சுகளோ அல்லது நேரடி ராணுவ நடவடிக்கைகளோ நடக்கவில்லை.. நாங்கள் அமைதியை ஏற்படுத்தவே முயல்கிறோம், அதனால் இது போர் அல்ல’ என்று புதிய விளக்கத்தை கொடுத்துள்ளார். அதேபோல டிரம்ப் அரசின் பாதுகாப்பு துறை அமைச்சர் பீட் ஹெக்செத், ‘தற்போது போர்நிறுத்தம்தான் அமலில் இருக்கிறது. எனவே, அந்த காலகட்டத்தையும் 60 நாள் காலக்கெடுவுடன் சேர்க்க முடியாது’ என்றார். இதன் மூலம் நாடாளுமன்ற அனுமதிக்கான காலக்கெடுவை தள்ளிப்போட அவர்கள் திட்டமிடுகின்றனர்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த விளக்கத்தை ஜனநாயக கட்சியினர் கடுமையாக எதிர்த்துள்ளனர். இது தொடர்பாக எம்பி டிம் கெய்ன் கூறுகையில், “சட்டப்படி இப்படி காலக்கெடுவை நிறுத்தி வைக்க முடியாது’ என்றார். இந்த 2 மாத போரால் 13 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் பில்லியன் கணக்கான டாலர்கள் செலவாகி இருப்பதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகிறார்கள். இந்த போருக்காக அமெரிக்கா ஏற்கனவே அதிகம் செலவிட்டுள்ளதாகவும் இந்த போரை முடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் எதிர்க்கட்சியினர் கூறுகிறார்கள்.

இந்நிலையில், அமெரிக்க அதிபரின் போர் அதிகாரத்தை கட்டுப்படுத்த அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. செனட் சபையில் இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. தீர்மானத்திற்கு ஆதரவாக 47 வாக்குகளும், எதிராக 50 வாக்குகளும் கிடைத்தன. குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை இருந்ததால், அவர்களால் இந்த தீர்மானத்தை தோற்கடிக்க முடிந்தது. இருப்பினும், குடியரசு கட்சியைச் சேர்ந்த ராண்ட் பால் போன்ற ஒருசிலர் அதிபருக்கு எதிராக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது. தீர்மானம் தோல்வியடைந்ததால், அதிபர் தரப்பு தற்காலிகமாக நிம்மதி அடைந்துள்ளது. ஆனால், “போர்நிறுத்தம் நிலவுவதால் 60 நாள் கெடு பொருந்தாது” என்ற அரசின் வாதத்தை சட்டப்படி எதிர்க்க போவதாக தீர்மானத்தைக் கொண்டு வந்தவர்கள் அறிவித்துள்ளனர். தீர்மானம் தோல்வியடைந்ததை தொடர்ந்து, சட்ட ரீதியாக இந்த விவகாரத்தை எதிர்கொள்ள அவர்கள் தயாராகி வருகின்றனர்.

ஒருபுறம் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கி உலக நாடுகளுக்கு ஈரான் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், மறுபுறம் அமெரிக்காவில் அதிபருக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையே அரசியலமைப்பு சட்டப் போர் தொடங்கியுள்ளது.

Related Stories: